பருத்தியை தாக்கும் அமெரிக்கன் காய்ப்புழு
அமெரிக்கன் காய்ப்புழு தாக்குதலுக்குள்ளான பூ மொட்டுகள் விரிந்து பின்னர் விழுந்து விடும். பாதித்த பகுதிகளில் வட்ட வடிவமான துளை காணப்படும். துளைகள் எச்சத்தினால் அடைக்கப்படாமல் சுத்தமாக காணப்படும். துளையின் கீழ் உள்ள புள்ளி வட்ட இதழ்களில் புழு வெளியேற்றிய கழிவுகள், அதாவது எச்சத்தினை காணலாம். தழைச்சத்து உரம் அதிகப்பட்டு செழித்து அடர்ந்து வளர்ந்த பயிரில் அமெரிக்கன் காய்ப்புழுத் தாக்குதல் அதிகமாக இருக்கும். இப்புழுவினை கட்டுப்படுத்த 'புரோபினோபாஸ்' (2 மில்லி) ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது 'ஸ்பின்னோசாடு' (0.5 மில்லி) ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். பயிரின் வளர்ச்சியை பொறுத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்து கரைசல் தேவைப்படும்.மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் என்று பல்வேறு வணிகப் பெயர்களில் கிடைக்கும் திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் மருந்து தெளித்தால் புழு நல்ல முறையில் கட்டுப்படுவதோடு, நன்மை தரும் பூச்சிகள் பாதுகாக்கப்படும். உழவர்கள் தங்களது பயிர்ப்பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தக்க ஆலோசனை பெற விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பயிர் மருத்துவ நிலையத்தில் பாதித்த பயிர் மாதிரியுடன் நேரில் அணுகலாம்.- முனைவர் ரா.விமலாதலைவர் பயிர் மருத்துவ நிலையம்.