உள்ளூர் செய்திகள்

கரும்பை தாக்கும் அமெரிக்கன் படைப்புழு

வட அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட படைப்புழுக்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மக்காச்சோளம், சோளம், பருத்தி போன்ற பயிர்களை தாக்கி சேதப்படுத்தின. தற்பொழுது இந்த படைப்புழுவின் தாக்குதல் கரும்பிலும் தென்படுகிறது. பெண் தாய் அந்துப்பூச்சிகள் இலைகளில் முட்டைகளை குவியலாக இடுகின்றன. ஒரு குவியலில் 100 முதல் 200 முட்டைகள் வரை இருக்கும். முட்டைகளின் மேல்புறத்தில் பெண் அந்துப்பூச்சிகள் செதில்களை பாதுகாப்பிற்காக இடுகின்றன.பாதிப்பு அறிகுறிகள்புழுப்பருவம் ஆறு புழு நிலைகளை கொண்டது. இளம் புழுப்பருவம் கருப்பு தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. ஆறாம் நிலையிழுள்ள புழுவின் தலைப்பகுதியிலும் வெண்ணிற கோடுகள் தென்படுகின்றன. உடம்பில் இறுதிப்பகுதியில் வெண்ணிற புள்ளிகள் சதுரம் போல் தோன்றுவது இதனை எளிதில் கண்டறிய உதவுகின்றது. புழுக்கள் இலையின் அடிப்பகுதியில் சென்று மறைந்து கொண்டு இலைகளை உண்ணுகின்றன. கூட்டுப்புழுக்கள் மண்ணில் 2-6 செ.மீ., ஆழத்தில் 20 - 30 நாட்கள் இருக்கும்.தாய் அந்துப் பூச்சிகள் சராசரி 10 நாட்கள் வரை உயிர் வாழும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி உண்ணுகின்றன. இளம் புழுக்கள் நுாலிழைகளை உருவாக்கி காற்றின் திசையில் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு செல்லுகின்றன. மூன்று முதல் ஆறு நிலைப் புழுக்கள் இலையுறையினுள் சென்று பாதிப்பை உண்டாக்குகின்றன.மேலாண்மை முறைவயலை சுற்றிலும் களைகள் இல்லாமல் மேலாண்மை செய்ய வேண்டும். நேப்பியர் புல்லை வயலை சுற்றிலும் வரப்பு பயிராக நடுவதன் மூலம் படைப்புழுவின் தாய் அந்துப் பூச்சிகள் நேப்பியர் புல்லில் முட்டைகளை இடும். நேப்பியர் புல்லில் குறைவான சத்து உள்ளதால் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் வளர்ச்சி குறைந்து இறந்து விடும். புழுக்களை கட்டுப்படுத்த 'பேசில்லஸ் துரிஞ்சியன்ஸிஸ்' 2 மி., ஒரு லிட்டரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் இலை மற்றும் இலையுறை நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். ரசாயன பூச்சி கொல்லிகளான 'ஸ்பைனோசேட்' 0.5 மி., ஒரு லிட்டர் அல்லது 'குளோர் ஆண்டிரி நில்ப்ரோல்' 0.3 மி., ஒரு லிட்டர் அல்லது 'இண்டாக்சாகார்ப் 1 மி., ஒரு லிட்டர் அல்லது 'ஏமாக்ஷன் பைன்ஜோயேட்' 0.4 மி., ஒரு லிட்டர் என இவற்றுள் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு இலை, இலையுறை நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். 2 சதவீதம் வேப்ப எண்ணெய் கரைசல் மற்றும் 2 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலையும் தெளித்து இயற்கை முறையில் இப்படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். அந்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் ஏக்கருக்கு 10 என்ற அளவில் கரும்பு வயலில் வைத்து கட்டுப்படுத்தலாம்.தொடர்புக்கு 90036 11419.-முனைவர். சொ. தாமரைச்செல்வி, கரும்பு அலுவலர்,கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !