ADDED : அக் 04, 2017 | ADDED : அக் 04, 2017
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்ட வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதல் இருப்பது வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடந்த கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இலைப்பேனானது வெங்காயத்தை தாக்கி சேதம் விளைவிக்கக்கூடிய மிகவும் முக்கியமான பூச்சியாகும். இந்த பேன்கள் கூட்டமாக இலைகள் மற்றும் இலை உறைகளில் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சும், தாக்கப்பட்ட இலைகள் மீது புள்ளிகள் காணப்படும். இந்த புள்ளிகள் பிறகு வெண்மை நிறத்திட்டுக்களாக மாறும். இந்த பூச்சி தாக்குதல் அதிகரிக்கும்போது இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி கருகிவிடும். கடுமையாக தாக்கப்பட்ட இலைகள் மீது இப்பூச்சியின் கருப்பு நிற கழிவுகள் தென்படும். இதனால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். சேதம் அதிகரிக்கும் போது 50 முதல் 60 சதவிகிதம் மகசூல் இழப்பு ஏற்படும்.
பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:
முதிர்ந்த தாய் பூச்சிகள் வெளிர் மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தில் இறக்கையுடன் தென்படும். இவை தனது முட்டைகளை இளம் குருத்துக்களில் இடும். இதன் முட்டையிலிருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் வெளிறிய மஞ்சள் நிறத்தில் காணப்படும். முதல் மற்றும் இரண்டாம் பருவ குஞ்சுகள் சுறுசுறுப்பாக இயங்கி இளம் குருத்துக்களை சுரண்டி உண்ணும். கூட்டுப்புழு பருவமானது மண்ணிலும், செடியின் கழுத்து பகுதியிலும் மற்றும் வெங்காய செதில்களுக்கு இடையிலும் மறைந்து தென்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
தோட்டங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், சீரான இடைவெளியில் களை எடுப்பதன் மூலமும் இலைப்பேனை கட்டுப்படுத்தலாம். இளஞ்செடியின் மீது நீரை வேகமாக தெளித்து இலைப்பேனின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். தெளிப்பு நீர் பாசன முறையையும் கையாளலாம். நீல நிற ஒட்டும் பொறியினை ஏக்கருக்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். வெங்காயம் பயிரிட்ட தோட்டங்களுக்கு அருகில் பூண்டு, பருத்தி, தக்காளி, வெள்ளரி, பசணி வகை காய்கறிகள் பயிரிடுவதை தவிர்த்தல் சிறந்தது. வெங்காயம் பயிரிடவுள்ள தோட்டங்களை சுற்றி மக்காச்சோளத்தினை தடுப்பு பயிராக பயிரிடலாம் என மதுரை வேளாண் அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் உஷாராணி, மனோன்மணி தெரிவிக்கின்றனர்.- முனைவர் சீ.சுரேஷ், முதல்வர்,வேளாண் அறிவியல் நிலையம், மதுரை.