செல்வம் தரும் செயற்கைக் கருவூட்டல்
கறவை மாடுகளுக்கான செயற்கை முறை கருவூட்டல் குறித்து பலரும் மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். இதனால் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தான் கறவை மாடுகள் சினை பருவத்திற்கு வருகின்றன என விவசாயிகள் நம்புகின்றார்கள். கால்நடை மருந்தகங்களின் செயற்கைக் கருவூட்டல் செய்த பின் மாடுகளை விரைவாக வீடுகளுக்கு ஓட்டிச் செல்வார்கள். வீடுகளுக்கு சென்றது. மேலும் செயற்கை கருவூட்டல் செய்த அன்றைய தினம் பொலி காளையையும் இனப்பெருக்கத்துக்காக சேர்த்து விடுவார்கள். அன்று முழுவதும் தண்ணீர் தீவனம் தராமல் பட்டினி போடுவர். தண்ணீர், தீவனம் கொடுத்தால் கருப்பையில் இருந்து விந்து வெளியேறிவிடும் என்பதும், மாடுகளை கீழே படுக்க விடாமல் மூக்குக் கயிறை மேல் நோக்கி இழுத்து மரத்தில் கட்டினால் விந்து வெளியேறாது கருப்பையில் தங்கும் என்பதும் விவசாயிகளின் எண்ணம். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தான் கறவை மாடுகள் பருவத்துக்கு வரும் என்பது தவறு. இது உண்மை என்றால் அன்றைய நாட்களில் தான் கால்நடை மருத்துவமனைக்கு ஏராளமான மாடுகள் வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியமான கறவை மாடுகள் 21 நாட்கள் இடைவெளியில் சினைப்பருவத்துக்கு வரும். எல்லாக் கறவை மாடுகளுக்கும் சினைப்பருவத்துக்கு வரும் தேதி வெவ்வேறாக இருக்கும். சினை ஊசி போட்ட பின், அவற்றை விரைவாக ஓட்டி செல்ல கூடாது, பட்டினியும் போடக்கூடாது. இதனால் கறவை மாடுகள் கருவுறுதல் தடைபடும். கருவூட்டல் செய்த மாடுகளுக்கு போதுமான பசுந்தீவனம், தண்ணீர் கொடுக்க வேண்டும். அன்றைய தினம் குளிர்ந்த நீரை மாட்டின் மீது தெளித்து விடலாம், தண்ணீர் வசதி இருந்தால் குளிப்பாட்டலாம். கோடை காலத்தில் இப்படி செய்வது சிறந்த பராமரிப்பு முறையாகும். காளைகளை இனப்பெருக்கத்துக்காக உடனே சேர்ப்பதால் பால்வினைகள் ஏற்படும். இது கன்று வீச்சு போன்ற தொந்தரவுகளை உண்டாக்கும். சினைப்பருவத்துக்கு மாடுகள் வந்ததும் கருவூட்டல் செய்யக் கூடாது. காலையில் பருவத்துக்கு வந்தால் அன்று மாலையும், மாலையில் பருவத்துக்கு வந்தால் மறுநாள் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும். -டாக்டர் வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை தொடர்புக்கு: 94864 69044.