உள்ளூர் செய்திகள்

துவரை சாகுபடி செய்யலாம்

இந்தியாவில் 3500 ஆண்டுகளுக்கு முன், முறையாக பயிர் செய்யப்பட்ட வெப்ப மண்டல, மிதவெப்ப மண்டல பயிர் துவரை. வறட்சியையும், கடுமையான காலநிலையையும் தாங்கி வளரும். துவரையானது வேகமாகவும் அதே நேரத்தில் குறைந்த சத்துள்ள மண்ணிலும் செழித்து வளரும். பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக பயிரிட்டால் கிளைகள் அதிகமாக வரும். கூடுதல் வருமானமும் கிடைக்கும். பட்டமும் ரகங்களும் எஸ்.ஏ.1, கோ 1, கோ 2 ரகங்கள் பயிரிடுவதற்கும் கூடுதல் மகசூலுக்கு ஏற்றவை. ஆடிப்பட்டம் சிறந்தது. ஏக்கருக்கு 3 கிலோ விதை தேவைப்படும். ஒரு ஏக்கருக்கான விதைகளை 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியாவுடன் 100 மில்லி ஆறிய அரிசி வடிகஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். புழுதி உழவு, உரம்3 அல்லது 4 முறை புழுதிபட உழுது ஒரு டன் ஊட்டமேற்றிய தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். இத்துடன் உழவுசால் மூலம் ஒரு ஏக்கருக்கு 30 கிலோ டி.ஏ.பி. இட வேண்டும். உயிர் உரங்களான 2 கிலோ ரைசோபியம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியாவை 50 கிலோ மட்கிய ஈரப்பதம் உள்ள தொழுவுரத்துடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் போது துாவவேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பயறுவகை நுண்ணுாட்டத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் போது துாவ வேண்டும். விதைப்பு முறை உழவுசாலில் வரிசையாக விதைக்க வேண்டும். பயிர் இடைவெளியாக வரிசைக்கு வரிசை 7 அடியும், செடிக்கு செடி ஓரடி இடைவெளி விடவேண்டும். விதை முளைக்கும் போதும், பூக்கும் பருவம், காய் வளர்ச்சி பருவங்களில் நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 15ம் நாள் ஒரு முறையும், 30ம் நாள் ஒரு முறையும் களை எடுக்க வேண்டும். பயறு சாகுபடியில் சரியான தருணத்தில் களை எடுக்காவிட்டால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறையும். 40 முதல் 50 ம் நாளில் பூக்கும் சமயத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வளர்ச்சி ஊக்கியை மாலை வேளையில் தெளிக்க வேண்டும். பூக்கும் பருவத்திலும் பிஞ்சு பிடிக்கும் பருவத்திலும் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து மகசூலை அதிகரிக்கலாம். பூச்சி, நோய் மேலாண்மை இளம் தளிர்கள், பூக்கள், மொட்டுகளில் அடை அடையாக கரும்பச்சை நிறத்தில் அசுவினி காணப்பட்டால் பூக்கள், பிஞ்சுகள் உதிரும். செடிகளை சுற்றி எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். இச்செடிகளை களைந்து அழிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 3 சதவீதம் தெளித்தால் பூக்களில் உள்ள பாதிப்பை குறைக்கலாம். ஏக்கருக்கு 300 மில்லி மோனோ குரோட்டோபாஸ் தெளிக்கலாம். பச்சைக் காய்ப்புழுக்கள் தலையை மட்டும் காய்களுக்குள் விட்டு வட்டவடிவ துவாரங்கள் ஏற்படுத்துகின்றன. ஏக்கருக்கு 6 இனக்கவர்ச்சிப்பொறிகளை வைத்து தாய் அந்துப்பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 4 சி.சி., டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டையை இலையில் கட்டி விட வேண்டும். விளக்குப்பொறி வைக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3மில்லி இமிடாகுளோர், 2 கிராம் அசிப்பேட், 3 மில்லி நிம்பசிடின் மூன்றையும் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி மாலத்தியான் தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மஞ்சள் தேமல் நோய் தாக்கிய செடிகளை அகற்றி அழிக்க வேண்டும். 3 நாள் புளித்த தயிர் 100 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேலையில் தெளித்தால் பூக்கள் அதிகம் பிடிக்கும்; அனைத்தும் காயாகும். வைரஸ் நோய் தாக்கினால் செடியை அகற்றுவதே நல்லது. செடியை அறுவடை செய்து வெயிலில் காயவைத்து தட்டி பயறுகளை பிரித்து எடுக்க வேண்டும். அருண்ராஜ் தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல்) மகேஸ்வரன் தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்) சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !