உள்ளூர் செய்திகள்

கோழிக்கும் மூக்குக்கண்ணாடி

மதுரை மாவட்டம் விளாச்சேரியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி நடராஜன். இவர் கடந்த ஆண்டு கால்நடை பராமரிப்பு துறை மூலம் நாட்டுக்கோழி புறக்கடை வளர்ப்பு திட்டத்தின் கீழ் 'அசில்' ரக நாட்டுக்கோழி குஞ்சுகள் வாங்க, 14க்கு 18 என்ற அளவில் 250 சதுர அடியில் செட் அமைக்க என 20 ஆயிரம் ரூபாய் மற்றும் தீவன செலவுக்கு 18 ஆயிரத்து 750 ரூபாய் மானியம் பெற்று 250 எண்ணிக்கையில் நாட்டுக்கோழிகளை வளர்த்தார்.அவர் கூறியதாவது: மானியம் பெறுவதாக இருந்தால் 250 சதுர அடியில் செட் அமைத்து, அதை சுற்றிலும் 500 சதுர அடி விட்டத்தில் கம்பி வேலி அமைக்க வேண்டும். நாட்டுக்கோழி வளர்ப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது ஒன்று உள்ளது. அதாவது நாட்டுக்கோழிகளின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் கோழிகள் ஒன்றுடன் ஒன்று தனது அலகால் கொத்திக்கொண்டே இருக்கும். இதனால் முடி உதிர்ந்து உடலில் தோல் மட்டுமே மிஞ்சும். இதனால் பார்ப்பதற்கு நோய் தாக்கிய கோழி போல் நோஞ்சானாகவும், சரியாக தீவனம் உண்ணாமலும், மெலிந்தும் காணப்படும். இதை தவிர்க்கவும், கோழிகள் திடகார்த்தமாகவும், சத்து மிகுந்ததாகவும், மிடுக்காகவும் வளர்க்க சில நவீன யுக்திகளை கையாள வேண்டும்.இதன்படி, கோழிகள் தங்களுக்குள் கொத்தாமல் இருக்க, அவைகளுக்கு மூக்குக் கண்ணாடி அணிவிக்க வேண்டும். அதாவது ஓடும் குதிரையின் கவனம் சிதறாமல் இருக்க, அதன் கண்களை மறைத்து விடுவர். இதே பாணியில் கோழியின் நேர் பார்வையை மறைக்கும் விதமாக கோழிக்கு மூக்குக்கண்ணாடி அணிவிக்கப்படுகிறது. இதனால் கோழிகள் தங்களுக்குள் சண்டையிடாது. நன்றாக முடி வளரும். அதிகமாக தீவனம் உண்ணும். தேவையான அளவு தண்ணீர் அருந்தும். 90 நாளில் ஒரு கிலோ எடையை அடையும். நாட்டுக்கோழியை பொறுத்தமட்டில் ஒரு கிலோ அல்லது ஒன்னேகால் கிலோ எடை இருக்கும் அளவிலேயே வாங்குவர்.கோழிகளுக்கு பசுந்தீவனம், வாழை இலை உள்ளிட்ட இயற்கை உணவுகளை அதிகளவு விரும்பி உண்பதால் இயற்கையாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது. கோழிக்கு அணிவிக்கும் மூக்குக்கண்ணாடி, மூக்கு ஊசி உட்பட ஒரு செட்டின் விலை 8 ரூபாய். நாட்டுக்கோழி ஒரு கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்கிறேன். மாதம் சராசரியாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது, என்றார். தொடர்புக்கு 94421 53003.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !