உள்ளூர் செய்திகள்

உலக வரலாறு சொல்லும் தென்னை மரங்கள்

காமதேனு, கற்பக விருட்சம், மரங்களின் சொர்க்கம் என்று ஆராதிக்கப்படுகிறது தென்னை பயிர்கள். உலகின் 105 நாடுகளில் 125 லட்சம் எக்டேர் பரப்பளவில் சாகுபடியாகிறது. இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் 90 லட்சம் எக்டேரில் பயிராகிறது. செப்.2 உலக தென்னை தினவிழா. தென்னை பயிர்களின் மூலம் இந்தியாவில் பல கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. சாகுபடி அதிகரிப்பு இந்தியாவில் 1950-51ல் 6.30 லட்சம் எக்டேராக இருந்த தென்னை பரப்பு தற்போது 22 லட்சம் எக்டேராக அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் 32.9 சதவீதம், கர்நாடகாவில் 26 சதவீதம், தமிழகத்தில் 23.5 சதவீத பரப்பளவில் தென்னை சாகுபடியாகிறது. ஒரு எக்டேருக்கு 9871 காய்கள் உற்பத்தியாகிறது. தென்னையில் உயர்தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில் தமிழகத்தில் வேளாண் பல்கலை மூலம் ஆழியார் நகர் வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் செயல்படுகின்றன. ரகங்கள் எத்தனை இந்தியாவில் 11 குட்டை ரகங்கள், 18 நாட்டு ரகங்கள், 20 வீரிய ஒட்டு ரகங்கள் உள்ளன. இதில் 16 ரகங்கள் இளநீர்த் தேவைக்கும் 35 ரகங்கள் கொப்பரைக்காகவும் 6 ரகங்கள் இருவழி பயன்பாட்டுக்கும் வளர்க்கப்படுகின்றன. ஆழியார் நகர் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளூர், வெளிநாட்டைச் சேர்ந்த 85 மரபணு ரகங்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. திசுவளர்ப்பு முறையில் தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்வது, நறுமண இளநீர், இளஞ்சிவப்பு மட்டை உற்பத்தி குறித்த ஆராய்ச்சியும் நடக்கிறது. உலகளவில் இந்தியா தென்னையில் மிகப்பெரிய ஏற்றுமதியை பெற்றுள்ளது. இந்திய தேங்காய்கள் 140 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. தென்னை சார் பொருட்களின் ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு ஆண்டுக்கு ரூ.355.4 கோடி வருவாய் கிடைக்கிறது. நீரா, தேங்காய்ப்பால், விர்ஜின் தேங்காய் எண்ணெய், தேங்காய் சிப்ஸ், கரித்துார், தென்னை ஜல்லி பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் பெருகியுள்ளன. பூச்சி, நோய் தாக்குதல் உலகளவில் 830 வகையான பூச்சி, சிலந்திகள், 173 வகை பூஞ்சானங்கள், 78 வகை நுாற்புழுக்களால் தென்னை மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. சமீபகாலமாக சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் சாகுபடியை கேள்விக்குறியாக்குகிறது. இதற்கு இணையாக வாடல் நோயும் ஆற்றோரப்பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதித்த மரங்களை அகற்றிவிட்டு மாற்றுப்பயிர் சாகுபடிக்கான ஆராய்ச்சி வேளாண் பல்கலையில் நடக்கிறது. ஊடுபயிர் பலன் தரும் தென்னையில் ஊடுபயிர்களாக கறிப்பலா, மங்குஸ்தான், ரம்பூட்டான், வெண்ணெய் பழம், சாத்துக்குடி, குடம்புளி, பட்டை, கிராம்பு, குறுமிளகு, மிளகு, திப்பிலி, கிராம்பு, சர்வசுகந்தி, பட்டை சாகுபடி செய்வது குறித்த ஆராய்ச்சியும் பல்கலையில் மேற்கொள்ளப் படுகிறது. குறிப்பாக இலவங்கப்பட்டையில் அடர்நடவுக்கான ஆராய்ச்சி துவங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து இலவங்கப்பட்டை நாற்றுகள் பெறப்பட்டு ஆழியார் நகரில் ஆராய்ச்சி நடக்கிறது. ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஏ.எல்.ஆர்., 1, 2 நெட்டை ரகங்களும், ஏ.எல்.ஆர்., 3 இளநீர் ரகமும் ஏ.எல்.ஆர்., 4 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. காசர்கோடு மத்திய பனைப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள கல்பஸ்ரீ, கல்பசங்கரா, கல்ப வஜ்ரா, கல்ப ரக்ஷா ரகங்கள் வேர் வாடல் நோய்க்கான தாங்கும் திறன் கொண்டவை. பூச்சி தாக்குதலுக்கு எதிராக ஒட்டுண்ணி, இரைவிழுங்கிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை வேளாண் பல்கலை பரிந்துரைக்கிறது. சத்துப்ப ற்றாக்குறைக்கு தென்னை டானிக், ஒருமித்த நுண்ணுாட்டக்கலவை உதவுகிறது. -சுப்புலட்சுமி, இணைப்பேராசிரியைதென்னை ஆராய்ச்சி நிலையம்தமிழ்நாடு வேளாண் பல்கலை, ஆழியார் நகர், பொள்ளாச்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
செப் 05, 2025 05:07

சும்மா எழுதறீங்க, ஆனால் விவசாயிகளின் தொடர்பு எல்லைக்கு அப்பால் தானே இருக்கறீங்க