உள்ளூர் செய்திகள்

வறட்சியில் பயிர் மேலாண்மை

வறட்சி, வெள்ளம், அதிக சூரிய ஒளி, குறைந்த மற்றும் உயர் வெப்பநிலை, மண்ணின் உப்புத் தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நச்சுத்தன்மை, வாயுமண்டல மாசு போன்றவை பயிர்களின் புறத்தோற்ற பண்புகள் மற்றும் பயிர் வினையியல் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி மகசூலை பாதிக்கும்.பயிர்களை பாதிக்கும் வறட்சிபயிர் தனக்குத் தேவையான அளவு நீர் உறிஞ்சுதலை விட அதிகமான அளவு நீரை வெளியேற்றுவதால் ஏற்படுவதே வறட்சி. இதை மண் வறட்சி, வாயுமண்டல வறட்சி என கூறலாம். மண்ணில் நீர் குறைவு, குறைவான மழைப்பொழிவு, போதிய பாசனம் கிடைக்காததால் இயல் மண் வறட்சி உண்டாகும். சில இடங்களில் மண்ணில் நீர் நிறைய இருந்தாலும் அதிகப்படியான உப்பு, அமில, காரம் காரணமாக தாவரங்களால் தண்ணீரை உறிஞ்ச முடியாது. எனவே தாவரங்கள் மண்ணில் நீர் இருந்தும் வறட்சிக்கு உட்பட்டது போல தோற்றமளிப்பது இயற்கூறு மண் வறட்சி எனப்படும். குறைந்த வளிமண்டல ஈரப்பதம், காற்றின் அதிக வேகம், உயர் வெப்பநிலை காரணமாக செடிகள் அதன் நீரை வெளியேற்றுவதால் நீர்ப் பற்றாக்குறை சூழ்நிலை உருவாவதை வாயுமண்டல வறட்சி என்கிறோம்.விதை முளைப்பின் போது வறட்சி ஏற்பட்டால் முளைப்புத்திறன், நாற்றுகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. இலை தழைப்பருவத்தில் ஏற்படும் விளைவுகள் இலைகளின் விரிவடையும் திறன், வளர்ச்சியை குறைக்கிறது. இலைகள் வாடிவிடும், செல்களிலுள்ள நீர்த்திறன் குறைவதால் 'அப்சிசிக்' அமில உற்பத்தி அதிகரித்து இலைகள் உதிர்ந்துவிடும். இனப்பெருக்க பருவத்தில் வறட்சி ஏற்பட்டால் பூக்கள், விதைப்பிடிப்பு திறன் பாதிக்கப்படும். வறட்சி நீடித்தால் பயிர்களில் பூக்கும் தன்மை முன்கூட்டியே ஆரம்பித்து விதை, பழங்களின் அளவு சிறுத்து மகசூலின் அளவும் குறைந்துவிடும். பூக்கும் பருவத்தில் நெல், கோதுமை தானியங்களில் வறட்சி ஏற்பட்டால் மகசூல் குறையும். பயறுவகைப் பயிர்களில் பூக்கும், காய் பிடிக்கும் பருவத்தில் வறட்சி ஏற்பட்டால் பூக்கும் தன்மை இழந்து பூக்களின் எண்ணிக்கையும் காய்களின் எண்ணிக்கையும் குறையும். ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை பழங்கள் அதிகப்படியாக உதிர்ந்துவிடும்.மண் பராமரிப்பு அவசியம்மண்ணில் எவ்வளவு ஈரம் இருந்தாலும் அனல் காற்றில் ஆவியாகிவிடும். காற்றின் வேகத்தைத் தடுத்தாலே நிலத்தில் நீர் வீணாவதை பெருமளவு தடுக்கலாம். காற்றுவீசும் வேகத்தைப் பொறுத்து 100 முதல் 200 மீட்டர் இடைவெளியில் காற்றுவீசும் திசைக்கு குறுக்காக யூக்லிப்டஸ் அல்லது சவுக்கு மரங்கள் நடவேண்டும். இந்த வரிசைக்கு பத்தடி தள்ளி பனைமரங்களை வரிசையாக நெருக்கமாக நடும் போது கூடுதல் வருமானம் கிடைக்கும்.அதிக வெயிலடிப்பதால் மண்ணில் ஈரம் காய்ந்து வேர்களுக்கு நீர் கிடைக்காமல் போகும். தென்னை நார்க்கழிவு, மரத்துாள், காய்ந்தசருகுகள், மாடுகள் கொட்டிலில் கழித்த தட்டைகளை நிலத்தில் பரப்பவேண்டும். மழை பெய்யும் போதோ, நீர் பாய்ச்சும் போதோ தென்னை நார்க்கழிவு அதன் அளவைப்போல ஐந்து மடங்கு தண்ணீரை உறிஞ்சி வைத்து மண்ணில் ஈரத்தை காக்கிறது. மானாவாரியில் நெருக்கமாக பழ மரக்கன்றுகளை சாகுபடி செய்தால் அவற்றுக்கு இடையான போட்டியில் போதிய நீரும் சத்தும் எந்த மரத்திற்கும் கிடையாது. வேர்கள் பல அடிகள் துாரம் பரந்திருக்கும் என்பதால் நிறைய இடைவெளி விட வேண்டும்.வறட்சி காலங்களில் ரசாயன உரங்களை தவிர்த்து கம்போஸ்ட் உரமிட்டால் மண்ணில் இளக்கம் ஏற்பட்டு அதிக மழை நீர் அடி மண்ணுக்கு செல்லும். மழைக் காலத்தில் மரங்களுக்கிடையே உழுது ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு பயிரிடலாம். அறுவடைக்கு பின் அவற்றின் தழைகளை மரங்களைச் சுற்றி பரப்பினால் ஈரத்தை காக்கும், மட்கிய பின் உரமாக மாறும்.பொட்டாஷ் சத்து வேண்டும்நிலத்தில் பொட்டாஷ் சத்து அதிகமிருந்தாலும் மழைகாலத்தில் ஓரளவு மேலுரமாக இடுவதால் நல்ல பலன் கிடைக்கும். பொட்டாஷ் சத்து அதிகமுள்ள நிலங்களில் வளரும் பயிர்கள் நன்றாக வறட்சியைத் தாங்கும். வறட்சி தொடங்கியவுடன் மாதம் ஒருமுறை ஒரு சதவீத பொட்டாசியம் கரைசலை, சிறிதளவு சோப்பு கரைசல் (10 லிட்டர் தண்ணீருக்கு (1 டேங்க் 100 கிராம்) முதல்நாளே கலந்து வைத்து மறுநாள், இலைகளின் மேல் நன்றாக நனையும் படி தெளித்தால் தரமான மகசூலும் கிடைக்கும்.-அமுதா, பேராசிரியை (பயிர் வினையியல்) விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மதுரைஅலைபேசி: 98439 35332


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !