பருவத்தே பயிர் செய்
வரும் ஆடிப்பட்டம் எந்தப் பயிர்களை நடப்பு ஆண்டு சாகுபடி செய்ய உள்ளோம்? என்பதை திட்டமிட்டு கன்றுகள் வெளியில் வாங்குவதா? தமது தோட்டத்தில் தயாரிப்பதா? என்ற முடிவு எடுத்து காய்கறிகளில் தக்காளி, கத்தரி, மிளகாய் சாகுபடிக்கு தமது தோட்டத்தில் பசுமைக்குடில் அமைத்து குழுவாக சேர்ந்து நல்ல நீர் வசதி உள்ள இடத்தில் குழித்தட்டுகள் மூலம் நாற்று தயாரிப்பு உத்திகள் கடைபிடிக்க வேண்டும் என டாக்டர் பா.இளங்கோவன் தெரிவித்தார்.தமிழக அரசு மூலம் இலவசமாக நாற்றங்கால் காய்கறி விதைகள் மூலம் உற்பத்தி செய்திட நிலவள நீர்வள திட்டத்தின் கீழ் பெரிய கோட்டை கிராமத்தில் மாதிரி கிராம பசுமைக்குடில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் காய்கறி சாகுபடிக்கு குழுவாக பதிவு செய்து கொண்ட பல விவசாயிகள் முன்னுரிமை பெற்று இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தென்னையுடன் ஊடுபயிராக வரப்புப் பயிராக வேலிப்பயிராக உயிர்வேலி மரங்கள் நிறைய உள்ளன. அவற்றுள் குறைந்த நீர் தேவைப்படும். வறட்சியிலும் வாடாது வரவு தரும் நீண்ட கால மரப்பயிர்களை தேர்வு செய்திட திட்டம் வகுப்பது நல்லது. குறிப்பாக தென்னையின் உட்பகுதிகள் அதிக நிழல் உள்ள போது ஜாதிக்காய், கொக்கோ, மிளகு, கறிப்பலா, சிறப்பாக வரவு தருபவை. மலர்ப்பயிர்களில் வெளிச்சம் உள்ள இடத்துக்கு மல்லி, முல்லை மற்றும் கனகாம்பரம் நல்ல தேர்வாகும். மேலும் கோழிக்கொண்டை அரளி, துளசி, சாமந்தி முதலிய பயிர்கள் வறட்சியிலும் நன்கு வளரும்.ஓரளவு நிழல் உள்ள தோப்புகளில் வாழை, மல்லிகை, கொத்தமல்லி, புதினா, நெல்லி அல்லது எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா பலன் தரும். மேலும் வளம் மிகுந்த பகுதிகளில் பைனாப்பிள், இஞ்சி, மஞ்சள், ஏலக்காய், மாங்காய் முதலியன சிறப்பான தேர்வாகும்.நிலப்பகுதியில் பயறுவகைப் பயிர்கள், குறிப்பாக கொள்ளு, குத்து அவரை, கொத்தவரை நல்ல மண் வளம் சேர்த்து காசும் தருபவை. நீர் குறைவான பகுதிக்கு கோ-4 கொழுக்கட்டைப்புல், குதிரை மசால், வேலி மசால், அகத்தி, செடி முருங்கை தேர்வு செய்யலாம். நடப்பு ஆண்டு பெய்ய உள்ள நல்ல மழை மூலம் உயர் மகசூல் செய்ய மேலும் ஆலோசனை பெற 98420 07125 எண்ணில் டாக்டர் பா.இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குநர், உடுமலையை தொடர்பு கொள்ளலாம்.