கட்டழகு தரும் கறிவேப்பிலை சாகுபடி
கட்டழகு தரும் கறிவேப்பிலையை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும் என, மதுரை மாவட்டம் மேலூர் நீர்மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: கறிவேப்பிலை உணவு செரிமானத்திற்கு உகந்தது. வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, போலிக் அமிலம் உள்ளது. முதுமையில் எலும்புத்தாது அடர்த்தி குறைவு (ஆஸ்டியோபோரோசிஸ்) வராமல் பாதுகாக்கிறது. கெட்ட கொழுப்பை கரைத்து, உடலுக்கு கட்டழகை தருகிறது. பூச்சிக்கடி, ஒவ்வாமையால், தோலில் ஏற்படும் அரிப்பை தணிக்கிறது. கண்பார்வை கூர்மை, கருகரு தலைமுடிக்கு கறிவேப்பிலை சிறந்தது. கறிவேப்பிலையை பச்சையாக மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தேய்க்கலாம். இதனை அரைத்து, மோருடன் கலந்து குடித்தால், இளநரை மறையும். வறட்சியான வாந்திக்கு கறிவேப்பிலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் அல்லது சர்க்கரை கலந்து அருந்தலாம். கர்ப்பகால வாந்திக்கு, தலா ஒரு ஸ்பூன் அளவில் கறிவேப்பிலைச் சாறு, தேன் சேர்த்து குடித்தால் மாற்றங்கள் ஏற்படும்.இதில் செங்காம்பு, பச்சைக்காம்பு என 2 ரகங்கள் உள்ளன. அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதியுள்ள மண் அவசியம். நீர் தேங்கினால் இலைகள் பழுத்து உதிரும். ஏக்கருக்கு 6500 முதல் 7000 நாற்றுக்கள் (8 கிலோ பழங்கள்) தேவைப்படும். நாற்றின் வயது 60-70 நாட்கள். 120 நாட்களுக்குள் நடவு செய்துவிட வேண்டும். குழி அளவு 45 செ.மீ., நீள, அகல, ஆழத்தில் இருக்க வேண்டும். செடிக்கு செடி 2.5 அடி நெருக்கி நடுவதன் மூலம் அதிக விளைச்சல் இருக்கும். இயற்கை உரம் பயன்படுத்தினால் இயற்கை மணம், குணம் மாறாமல் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.