நலிவு தரும் நைட்ரேட் நஞ்சு
விவசாயிகள் பொதுவாக காய்கறி கடைகள், காய்கறி மார்க்கெட்டுகளில் கழிக்கப்பட்ட முட்டைக்கோசு, காலி பிளவர் ஆகியவற்றின் இலைகள் மலிவாக கிடைக்கின்றன என்ற கருத்தில் அளவுக்கு அதிகமாக கால்நடைகளுக்கு தீவனமாகத் தருவார்கள். இவ்விலைகளில் நைட்ரேட் உப்பு அதிகமாக உள்ளது. குடிதண்ணீரில் நைட்ரேட் உப்பு அதிகம் கலந்து இருந்தாலும், இந்த உப்பு அதிகமுள்ள பசுந்தீவனங்களை சாப்பிடுவதாலும் நைட்ரேட் நச்சு நிலை ஏற்படும். தழைச்சத்து (நைட்ரஜன்) பயிரின் தேவைக்கு அதிகமாக நிலத்தில் இடுவதால் பயிரின் பாகங்களில் படியும் தழைச்சத்து புரதச்சத்தாக மாற வாய்ப்பில்லாமல் நைட்ரேட் உப்பு வடிவத்திலேயே இருக்கும். இப்படிப்பட்ட பயிரைச் சாப்பிடும் ஆடுகளும், மாடுகளும் பாதிப்படைகின்றன.நைட்ரேட் உப்பு கால்நடைகளால் உட் கொள்ளப்பட்ட பிறகு அது நைட்ரைட் ஆக மாறுவதால் தான் பாதகம் விளைகிறது. அதாவது நைட்ரேட்டை விட நைட்ரைட் தான் பாதகமானது. இந்த மாறுதலுக்கு காரணம் வயிற்றின் அமில நிலையும், பாக்டீரியாக்களும் தான். மூச்சு விடுவது அதிகமாவது, வாயில் நுரை தள்ளுவது போன்ற அறிகுறிகள் நைட்ரேட் நஞ்சின் அறிகுறியாக இருக்கலாம். நைட்ரேட் உப்பு உணவில் தொடர்ந்து அதிகமானால் உடலில் நடுக்கம், சிறுநீர் அதிகமாக கழித்தல் போன்ற நிலை உண்டாகும். மேலும் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டை நைட்ரேட் பாதிப்படைய செய்கிறது. நைட்ரேட் நைட்ரஸமைனாக மாறினால் கருச்சிதைவு மற்றும் புற்று நோய் உண்டாகும்.நலிவு தரும் நைட்ரேட் நச்சினை தவிர்க்க வரும் முன் காக்கும் நடவடிக்கைகளே சிறந்தது. தீவனப் பயிர்களுக்கு நைட்ரஜன் உரமிடும்போது அளவுக்கு மிகாமல் வேளாண் அலுவலர்களின் பரிந்துரை செய்த அளவிலேயே உரமாக இட வேண்டும். 'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்', என்ற பழமொழி இந்த நைட்ரேட் விஷயத்தில் உண்மையான கருத்து என்பதை விவசாயிகள் உணர வேண்டும். தொடர்புக்கு 94864 69044.- டாக்டர் வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை