உலர் மலர் அலங்காரம்
உலர் மலர்களையும், உலர் இலைகளையும் தயாரிக்க நல்ல சூரியவெளிச்சம் நிலவும் நாட்களில் செடியின் மீதுள்ள காலைப்பனி நீங்கிய பின்னர் சேகரிக்க வேண்டும். அறுவடை செய்த பின்னரும் மலர்களில் பனி நீர்த்துளிகள் காணப்பட்டால் அவற்றை உறிஞ்சும் காகிதம் கொண்டு ஒற்றி அகற்றிவிட வேண்டும். நீர் பாய்ச்சிய உடன் மலர்களைப் பறிக்காமல் நீர்பாய்ச்சி ஓரிரு நாட்கள் கழித்து, பின்னரே செடிகளிலிருந்து மலர்களைப் பறிக்க வேண்டும். நிறம் வெளிறாமல் புதிதாக மலர்ந்த மலர்களைத் தேவையான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்தவுடன் காலந்தாழ்த்தாமல் உலர்த்த வேண்டும். இல்லாவிடில் இதழ்கள் வாடி தேவையான மலர் வடிவத்தினை இழந்துவிடும்.உலர்த்தும் முன்னர் தேவையற்ற பாகங்களை வெட்டி அகற்றிவிட வேண்டும். அவற்றை காகிதங்களுக்கிடையில் வைத்து அதன் உருவ அமைப்பு போன்றே அழுத்தி வைக்க வேண்டும். உறிஞ்சும் காகிதங்களுக்கு இடையிலோ அல்லது உலர் கலன்களில் செயற்கையாக பராமரிக்கப்படும் வெப்பத்திலோ மலர்களை உலர்த்தலாம். மலர் வகைகளுக்கேற்றவாறு உலர்த்தும் வெப்பநிலையும் உலர்த்தும் காலமும் மாறுபடுகிறது. எனவே மலர் வகைகளைத் தனித்தனியே உலர்த்த வேண்டும்.கெலிகிரைசம், லிம்மோனியம் போன்ற மலர்களைத் தலைகீழாக கட்டி விடுவதன் மூலம் காற்றில் உலர்த்தலாம். இவ்வாறு உலர்த்துவதால் இம்மலர்கள் தங்கள் புத்தம் புதுத் தன்மையில் இருந்து மாற்றங்களையும் அடைவதில்லை.இலைகளையும் மலர்களையும் வெள்ளை மணல், சிலிக்கா ஜெல், போராக்ஸ் போன்றவை அடங்கிய உலோக, பிளாஸ்டிக் அல்லது மண் கலன்களில் வைத்துஅறை வெப்ப நிலையிலேயே உலர்த்தலாம். இம்முறையில் உலர்த்தும்போது மலர்கள் உலர நீண்டநாட்கள் எடுத்துக்கொள்ளும்.உலர் ஊடகத்தில் வைக்கப்பட்ட மலர்களை தினமும் சூரிய ஒளியில் உலர வைப்பதன் மூலம் மலர்கள் விரைவில் உலர்ந்துவிடும். மின்சாரம் மூலம் வெப்பப்படுத்தப் படும் ஓவன்களிலும் மலர்களை மிக விரைவாக உலர்த்தலாம். இம்முறையில் உலர்த்த ஒவ்வொரு வகை மலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை தேவைப்படும். உதாரணமாக ரோஜா மலர்களை 40-45 டிகிரி செ. வெப்பநிலையில் 48 மணி நேரம் வைப்பதன் மூலம் உலர்த்தலாம். ஆனால் கிளாடியோலஸ் மலர்கள் இந்த வெப்பநிலையில் உலர 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.நுண்ணலைகளால் வெப்பப் படுத்தப்படும் ஓவன்களில் சிலிக்கா ஜெல்லில் பதப்படுத்தப் பட்ட மலர்களையும் இலைகளையும் மண்பாண்டங்களில் வைத்து உலர்த்தலாம். இதுவும் ஒரே சீராக மற்றும் விரைவாக உலர்த்தும் முறையாகும்.மிகவும் மெலிந்த பூக்காம்புகளைக் கொண்டுள்ள மலர்களின் காம்புகளை அகற்றிவிட்டு 5 செ.மீ. நீளமான மெல்லிய கம்பியில் மலர்களை இணைத்து உலர்த்தி பயன்படுத்தலாம். ஆழமற்ற தட்டுகளில் அடிப்பரப்பில் 5 செ.மீ. அளவில் உலர் ஊடகத்தில் ஒன்றை (போராக்ஸ், வெள்ளை மணல்) நிரப்பி அவற்றின் மேல் மலரை ஒழுங்காக வைக்க வேண்டும். சாமந்தி, டேலியா, ரோசா, மெரிகோல்டு போன்றவற்றை அவற்றின் மலர்க்காம்புகளுடனேயே உலர்த்தலாம். இவ்வாறு உரல் ஊடகத்தில் பாதுகாக்கப்பட்ட மலர்களை, ஓவனில் ஏற்ற வெப்பநிலையில் சரியான காலம் வரை உலர்த்த வேண்டும். நன்கு உலர்ந்த மலர்களை உலர் ஊடகத்தினின்று வெளியே எடுத்து மலர்களில் ஒட்டியுள்ள ஊடகத் துகள்களை அகற்றி அவற்றை சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு உலர்த்திய மலர்களையும் இலைகளையும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் ஜார்களில் சிலிக்கா ஜெல் படிகங்களுடன் சேமித்து வைக்கலாம்.உலர் மலர்களையும் உலர் இலைகளையும் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் கலன்களிலுள்ள ஈரப்பதம், காற்று மற்றும் தூசு போன்றவற்றால் பாதிக்காத வகையில் மூடி, அறைகளில் அலங்காரமாக வைக்கலாம். தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபுரம்-638 657.-ஆர்.ஜி.ரீஹானா, 89037 57427.