உள்ளூர் செய்திகள்

தென்னை வளர்ச்சி வாரியத்தின் மகத்தான பணிகள்

தென்னை சார் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துதல், தேங்காய் மற்றும் தேங்காய் சார் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல். தென்னை சாகுபடியாளர்களுக்கும் தென்னைசார் தொழில் முனைவோர் களுக்கும் தொழில்நுட்ப அறிவுரை வழங்குதல். தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்க நிதி உதவி மற்றும் இதர உதவிகளை செய்து தருதல், தேங்காய் மற்றும் தேங்காய் சார் பொருட்களைப் பதனம் செய்வதற்கு நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதற்கு ஊக்கம் அளித்தல்.ஒருங்கிணைந்த தென்னை தொழில் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்திவரும் திட்டங்கள்: தென்னை நாற்றுகள் உற்பத்தி மற்றும் விநியோகம், தென்னை சாகுபடி பரப்பளவை விரிவுபடுத்துதல். உற்பத்தி திறன் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பண்ணையம், தொழில்நுட்ப செயல்விளக்கம், சந்தை மேம்பாட்டு விளம்பரங்கள், தகவல் மற்றும் கணிப்பொறி தொழில்நுட்பம் தென்னை தொழில்நுட்ப சிறப்பு செயல்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப் படும் திட்டங்கள்: தென்னையைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிப்பது, செயல் விளக்கங்கள் செய்வது மற்றும் செயல்படுத்துவது, தேங்காய்சார் பொருட்களைப் பதனம் செய்வது மற்றும் பண்முகப் படுத்துவதற்கான தொழில் நுட்பங் களை கண்டு பிடிப்பது மற்றும் செயல் படுத்துவது, சந்தை ஆய்வு மற்றும் விளம்பரம் செய்வது.தென்னை சுற்றுலா: தற்போது தென்னை சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு தென்னை வழித்தடம் என்ற சுற்றுலாத் திட்டத்தை தென்னை வளர்ச்சி வாரியம் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் சுற்றுலாப் பயணிகள் கேரளாவில் கொச்சிக்கு அருகிலுள்ள கும்பளாங்கி என்ற சுற்றுலா கிராமத்திலிருந்து புறப்பட்டு, இந்தியாவின் தெற்கு, கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அந்த இடங்களில் வசிக்கும் தென்னை விவசாயிகளின் வாழ்க்கை முறை பற்றியும் தேங்காய் மற்றும் தென்னை மரத்தின் இதர பாகங்களின் பயன்பாடுகள் பற்றியும் கண்கூடாகக் கண்டு நேரடியாக அறிந்துகொள்வார்கள். நமது தென்னை விவசாயத்தின் மகிமையை உலகறியச் செய்வது மற்றும் இந்த கிராமங்களைத் தன்னிறைவு பெறச்செய்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பது, மதிப்புக் கூட்டப்பட்ட தென்னை சார் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பது, அந்த பொருட்களை நல்ல முறையில் சந்தைப்படுத்துவதற்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து தருவது போன்றவைகளும் இந்த திட்டத்தில் அடங்கும். இந்த சுற்றுலாவின் போது சுற்றுலா பயணிகள், தென்னை மரங்களின் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்க முடியும். உடலுக்கு தெம்பூட்டும் இளநீரைக் குடித்து இன்புற முடியும். சுவையான உணவு வகைகளை உண்டு மகிழ முடியும். அழகிய கைவினைப் பொருட்களை வாங்கி மகிழ முடியும். இவைகளைத் தவிர, தென்னை மரங்கள் நிமிர்ந்து நிற்கும் கரைகளைக் கொண்டுள்ள உப்பங்கழிகளில் உல்லாசப்படகு சவாரி செய்ய முடியும்.அருங்காட்சியகம்: பலவகை தென்னை சார் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அருட்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. மனிதசக்தி மற்றும் கருவிகள் உதவியால் தென்னை மரத்தில் ஏறும் முறைகள், தேங்காய் பறிக்கும் முறைகள், தேங்காய் உரிக்கும் முறைகள் யாவும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். தென்னை மரக்கட்டைகள் மற்றும் தென்னை ஓலைகளைப் பயன்படுத்தி தென்னை மர வீடு ஒன்றை கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.தென்னைப்பூங்கா மதிப்புக் கூட்டப் பட்டுள்ள தென்னைசார் பொருட்களை தயாரிப்பது மற்றும் அவற்றை சந்தைப் படுத்துவது பற்றி விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு தென்னை பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. தேங்காய் சிரட்டை மற்றும் தென்னை மரக்கட்டையில் செய்யப்பட்ட அழகிய கைவினைப் பொருட்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்யும் வகையில் கைவினைக்கிராமம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. அங்கு கைவினைப் பொருட்களுக்கான பயிற்சி மையமும் அமைக்கப்படும். இந்த திட்டம் செயல்படும் பகுதிகளிலுள்ள தென்னை கிராமங்கள் நாளடைவில் மையக் கிராமங்களாக மாற்றப்படும். அவைகளில் தென்னை சம்பந்தமான அதன் அனைத்து செயல்பாடுகளும் செயல் விளக்கங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு செய்துகாட்டப்படும். அங்கு தென்னை சார் பொருட்கள் யாவும் வாங்குவதற்கு கிடைக்கும். பெரும்பாலும் தென்னை விவசாயிகள் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களாவார்கள். அவர்கள் அனைவரும் இந்தத் திட்டம் மூலம் அதிக நன்மை அடைவார்கள்.தென்னை வளர்ச்சி வாரியத்தின் தென்னை விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பது, மானியம் வழங்குவது, சுற்றுலா அழைத்துச் செல்வது, விற்பனைக்கு உதவுதல், புத்தகங்கள் வெளியிடுதல், பத்திரிகைகள் (பல மொழிகளில்) வெளியிடுதல் போன்ற சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 'தென்னை இதழ்' என்னும் காலாண்டுஇதழ் தமிழில் வெளியிடுகின்றனர். வருடசந்தா ரூ.40 மட்டுமே. குறைந்த விலையில் தென்னை விவசாயம், உபபொருட்கள், தேங்காய் உணவுகள், டைரக்டரி என பல தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடுகின்றனர். இவ்வாரியத்தை தென்னை விவசாயிகள் பயன்படுத்தி முன்னேறிட வேண்டும். மேலும் விபரங்களுக்கு: தலைவர், Chairman, Coconut Development Board, Ministry of Agriculture, Govt. of India, Kerala Bhavan, Kochi682 011. ph: 0484237 7266. Fax: 0484237 7902, www.coconutboard.gov.in. email: cdb/cochi@gmail.com. தமிழக கிளை: துணை இயக்குனர், C/o.இயக்குனர் அக்ரிகல்சுரல் மார்க்கெட்டிங், இரண்டாம் மாடி, தொழிற்பேட்டை, Cipet ரோடு, கிண்டி, சென்னை-32.-எம்.ஞானசேகர்,தொழில் மற்றும் விவசாய ஆலோசகர், 97503 33829.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !