உள்ளூர் செய்திகள்

கார்த்திகைப்பட்டத்தில் நிலக்கடலை

கார்த்திகைப்பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்தால் அதிக விளைச்சல் பெறலாம். விதைப்புக்கு முன் விதைப்பரிசோதனை செய்வது அவசியம். கார்த்திகை, மார்கழி பட்டத்தில் பெருமளவில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அதிக விளைச்சல் பெறுவதற்கு தரமான விதைகளை தேர்வு செய்யவேண்டும். கதிரி 1812, தரணி, டி.எம்.வி.,14, வி.ஆர்.எல். 9, 10, கிர்னர் 4, 5 ரகங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் ஒரு ரகத்தினை தேர்வு செய்து ஏக்கருக்கு 50 முதல் 55 கிலோ என்ற அளவில் வரிசைக்கு வரிசை 30 செ.மீ., வீதம் இடைவெளியும் செடிக்கு செடி 10 செ.மீ., இடைவெளியில் விதைகளை விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 7:14:21 என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும். உற்பத்தியை அதிகரித்து திரட்சியான காய்களை பெற அடியுரமாக 80 கிலோ ஜிப்சம், இரண்டாவது களையெடுப்பின் போது மேலுரமாக 80 கிலோ ஜிப்சம் இடவேண்டும். தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்வதால் நிலக்கடலை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் முன்கூட்டியே விதைப் பரிசோதனை செய்து விதையின் தரம் அறிந்து கொள்ளலாம். முளைப்புத்திறன், புறத்துாய்மை, பிற ரக விதைக்கலப்பு, ஈரப்பதம் ஆகியவற்றை பரிசோதனை செய்த பின்னரே விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். தரமான நிலக்கடலை விதையில் குறைந்தபட்சம் 70 சதவீதம் முளைப்புத்திறன், 96 சதவீதம் புறத்துாய்மை, அதிகபட்சமாக 9 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் விதைப்பரிசோதனை அலுவலகங்களை தொடர்பு கொண்டு ரூ.80 கட்டணம் செலுத்தி விதைப்பரிசோதனை செய்யலாம். --சிவகாமி, விதைப்பரிசோதனை அலுவலர் ஜானகி, சாய்லட்சுமி சரண்யா வேளாண்மை அலுவலர்கள் விதைப்பரிசோதனை நிலையம் நாகமலை புதுக்கோட்டை, மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !