வேளாண் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள்
அணைகள் மூலம் ஒரு போகம் சாகுபடி செய்யத்தான் தண்ணீர் கிடைக்கிறது. நிலத்தடி நீர் கீழே போய்விட்டது. விவசாயம் லாபகரமாக இல்லை. கரும்பு விற்பனை செய்தால் கரும்பாலைகள் குறிப்பிட்ட நாளில் விவசாயிகளுக்கு பணம் தருவதில்லை. இச்சூழ்நிலையில் இதர மாநில விளை பொருட்களும், வெளிநாட்டு பழங்களும் அதிகம் இறக்குமதி செய்வதால் உள்ளூர் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. ஆப்பிள் ஆனாலும் சரி, பெரிய வெங்காயம், காரட், பூண்டு என எந்த பொருளும் வெளி மாநில பொருட்கள் வரத்தை, விளைச்சல் பொறுத்து தினம் ஒரு விலை விற்கிறது. கிலோ 100 ரூபாய்க்கு விற்கும் முருங்கை அல்லது தக்காளி 50 லோடு வேறு மாநிலத்தில் இருந்து வந்து விட்டால் கிலோ 15 ரூபாய், என குறைந்து விடுகிறது. இப்படி நிரந்தர விற்பனையும், லாபமும் விவசாயத்தில் இல்லை.எனவே கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டுதல், நாட்டுக்கோழி, முயல், பன்றி, காடை,வான்கோழி வளர்ப்பு, மண் புழு உரம் தயாரிப்பு, மீன் வளர்த்தல், ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை போடுதல், உயிராற்றல் உரம் வளர்த்தல் போன்ற பல துறைகளில் ஈடுபட்டு விவசாயிகள், படித்தவர்கள் பெரும் செல்வந்தர்களாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர். ஒருங்கிணைந்த பண்ணைகள், தோப்புகள், தென்னங் கன்றுகள் நடுதல், கயிறு தொழில்கள் போன்றவற்றில் பலர் ஈடுபட்டு கணிசமாக சம்பாதிக்கின்றனர். ஆனால் விவசாயம் போல் அல்லது மரம் வளர்ப்பு போல் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன், கலர் மீன் வளர்ப்பு இலகுவானது இல்லை.நோய், முதலீடு, மார்க்கெட்டிங் என முழுமையான பயிற்சி பெற்றால் மட்டுமே தொழில் நுணுக்கம் கற்று, நவீன முறையில் தொழில் செய்ய முடியும். அதற்கு தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலை கழகம், தமிழ்நாடு ஜெயலலிதா மீன் வள பல்கலை கழகம், என்.ஜி.ஓ., எனப்படும் அறக்கட்டைகள், கே.வி.கே., எனப்படும் விவசாய விஞ்ஞான கேந்திரங்களில் முழு பயிற்சி தருகின்றனர். கூட்டுறவு வங்கிகள், நபார்டு, 'லீட்' எனும் முன்னாடி வங்கிகள், கிராம வங்கள் கடன் அளிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் கடன், மானியம் தருகின்றன. பயிற்சிக்கு சென்று விட்டால் முழு ஆலோசனையை பல்கலை கழகம் வழங்கும். எனவே பயிற்சி தான் முதல் பணி. தொடர்புக்கு 95662 53929- எம்.ஞானசேகர், விவசாய ஆலோசகர், சென்னை