வருவாய் அள்ளித்தரும் கடக்நாத் கோழி வளர்ப்பு - சிவகங்கை பெண் விவசாயி சாதனை
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பெண் விவசாயி எஸ்.அழகு. இவர் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நெல், பயறு வகைகள் நடவு செய்து, ஆடு, சத்தீஸ்கர் மாநில கடக்நாத் கோழி, பசு மாடு வளர்ப்பு என கிராமத்தில் விவசாய புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். அவர் கூறியதாவது: எங்களுக்கு சொந்தமான 15 ஏக்கரில், 10 ஏக்கரில் அமோகா வீரிய ரக நெல், பயறு வகைகள், கோ 5ரக வெங்காயம் விவசாயம் செய்கிறேன். பண்ணையில் 30 பசுக்கள், 60 வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வளர்க்கிறேன். 'தோழன் களம்' என்ற பெயரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் நிறுவி நெற்குப்பை விவசாயிகளிடம் பாலை சேகரித்து காரைக்குடி ஆவினுக்கு தினமும் 250 லிட்டர் வழங்குகிறோம். கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளேன். 'கடக்நாத் கோழி' வளர்ப்புஅசைவ பிரியர்களிடம் பிரசித்தி பெற்ற சத்தீஸ்கர் மாநில 'கடக்நாத் கோழி'கள் 150 வரை வளர்க்கிறேன். இதன் முட்டை உள்ளூரில் 10, வெளியூரில் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கறிக்காக ஒரு கோழி 450 ரூபாய் வரைவிற்கப்படும். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் தலைவர் செந்துார்குமரன் தலைமையில் பேராசிரியர்கள் புதிதாக வரும் யுக்திகள் குறித்து பயிற்சி அளிக்கின்றனர். அங்கு பயிற்சி பெற்றதன் மூலம் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் சாதிக்க முடிந்தது. என் கணவர், குடும்பத்தார் ஒத்துழைப்புடன் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறேன்.மத்திய அரசு விருதுமத்திய அரசு திறன்படைத்த பெண் விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு டிசம்பரில் 'மகிளா கிஷான்' விருது வழங்க உள்ளது. அப்பட்டியலை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தயாரித்து அரசுக்கு அனுப்பியது. சிவகங்கை மாவட்டம் சார்பில் அந்த விருதை பெற நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றார்.இவரது ஆலோசனை பெற 96001 02366.-என்.வெங்கடேசன்மதுரை.