உள்ளூர் செய்திகள்

தர்ப்பூசணியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

உலக இருதய பாதுகாப்பு சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு, ஆப்ரிக்காவை தாயகமாக கொண்ட தர்ப்பூசணிப்பயிர் தமிழகத்தில் பத்தாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. உடலுக்கு தேவையான பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, பி6, சி மற்றும் லைகோபின், சிட்ருலின் போன்ற நோய் எதிர்ப்பு தன்மையை கொண்டுள்ள அமினோ அமிலங்களை அதிகம் கொண்டு உள்ளது தர்ப்பூசணி. டிசம்பர் - ஜனவரி மாதங்களிலும், நிலப்போர்வையுடன் கூடிய நுண் நீர்ப்பாசன, உரமிடும் கருவி அமைப்புடன் துல்லியப் பண்ணை முறையில் ஆண்டு முழுவதும் பயரிடலாம். கண் பார்வையை தெளிவுபடுத்தும், இயற்கை மூலக்கூறான 'கெரட்டினாய்ட்' அதிகம் உள்ள தர்ப்பூசணி பழ வகையில் சுகர்பேபி, அபூர்வா, பெரியகுளம் -1, மகாராஜா, லைலா, சுமோ, வீரிய ரக எண் 34, எண் 200, மீனா, தாரா, கிரண், மிதுலா, டிராகன்கிங் மற்றும் ஆண்டு முழுவதும் பயிரிட ஏற்ற 'ஐஸ் பாக்ஸ்' ரகங்கள் உள்ளன.தேவை மண் பரிசோதனைதர்ப்பூசணியை பொதுவாக வெள்ளை ஈ, கருநிறப்புள்ளிகளை உடைய சிவப்பு நிறத்துடன் கூடிய பூசணி வகை வண்டுகள், இலை மற்றும் காய்களை தின்னும் புழுக்கள் போன்ற பூச்சிகளும், திடீர் வாடல் நோய், வேர் அழுகல் நோய், சாம்பல் நோய், பறங்கி மற்றும் பூசணி வகை நச்சுயிரி நோய் போன்ற நோய்களும் தாக்கி அதிக பொருளாதார சேதத்தினை ஏற்படுத்துகின்றன. இவ்வகை பூச்சி, நோய்கள் ஆரம்பத்திலேயே வராமல் தடுக்க விதை நேர்த்தி செய்தல், பூச்சிகளை கவர்ந்திழுக்கும் மஞ்சள், ஊதா வண்ண அட்டைகள், விளக்கு பொறிகள், இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்துதல், வேம்பு கலந்த இயற்கை தாவரப்பூச்சி நோய் கொல்லிகளை முன் கூட்டியே தெளித்தல் பயிரிடும் முன் நிலத்தில் உள்ள 'ப்யுசேரியம்', 'பித்தியம்', போன்ற தீமை செய்யும் பூஞ்சாண் நுண் உயிரிகளின் எண்ணிக்கையை முன் கூட்டியே கண்டறிதல் போன்ற முன் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வகை மண் பரிசோதனைகள் அரசு, அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே தர்ப்பூசணியைபயிரிடும் முன் மண் பரிசோதனை செய்வது அவசியம்.நோய்த்தடுப்பு முறைகள்வேர் அழுகல், நாற்று அழுகல், திடீர் வாடல் நோய், சாம்பல் நோய், இலைகள் மற்றும் தண்டுகள் மற்றும் காய்களில் சாறு வடியும் நோய்களை கட்டுப்படுத்த விதைகள் மற்றும் நாற்றுக்களை நடும் முன்பே சூடோமோனஸ், புளுரோசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, பேசில்லஸ் சப்டிலிஸ் போன்ற நுண் உயிரி கலவைகளை ஏக்கருக்கு தலா ஒரு கிலோ வீதம் 25 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 250 கிலோ நன்கு மக்கிய தொழு எருவுடன் கலந்த ஊட்டமேற்றிய நுண் உயிர் கலவையை கடைசி உழவில் இட வேண்டும். விதைகளை நடும் முன் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், புளுரோசன்ஸ், அசோஸ் பைரில்லத்துடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைகள் மற்றும் குழித்தட்டு நாற்றாங்கால் முறையில் வளர்க்கப்பட்ட நாற்றுகள் நட்ட 15 நாட்களுக்கு ஒரு முறையும், 30 நாட்களுக்கு ஒரு முறையும் 0.3 சதவீதம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் 0.3 சதவீதம் பேசில்லஸ் சப்டிலிஸ் நுண் உயிரிகளை, இலை வழியாக தெளிக்க வேண்டும். இதனால் ஆரம்பத்திலேயே வைரஸ் நோய்களும் கட்டுக்குள் கொண்டு வர முடியும். தொடர்புக்கு 72009 95619.- எஸ்.ராதாகிருஷ்ணன்தோட்டக்கலை முன்னாள் துணை இயக்குனர், சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !