உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பம்

சின்னவெங்காயம் -அறுவடை பின் சார் தொழில்நுட்பங்கள்: நன்கு பதப்படுத்தப்பட்ட வெங்காயத்தில் ஒரு கனமீட்டருக்கு 50 கிராம் கந்தகம் என்ற அளவில் 3 மணி நேரத்திற்கு மேல் ஆவியாகச் செலுத்தினால் எவ்வித எடைக்குறைவுமின்றி நோயினால் ஏற்படும் இழப்பு 43 சதத்திலிருந்து 2.5 சதம் வரை குறைவதாக தேசிய வெங்காயம் மற்றும் பூண்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் காமாக் கதிர்களைக் கொண்டு கதிர்வீச்சுக்கு உட்படுத்துவதால் முளைத்தல் தடுக்கப்படுவதாக வும் எடைக்குறைவு எதுவும் நிகழ்வதில்லை எனவும் தெரியவந்துள்ளது. பொதுவாக கரும்படல நோயின் தாக்குதல் சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் வகைகளைக் காட்டிலும் வெள்ளை வகைகளில் அதிகமாக இருக்கும். அஸ்பர்ஜில்லஸ் பியூசோபியம், பெனிசிலியம் சிற்றனங்களே அழுகலை உண்டாக்கும் பூஞ்சாணங்களாகும்.தமிழகத்தில் கோ.ஆன்.5 என்ற வெங்காயம் எளிதில் வளரக்கூடிய இளஞ்சிவப்பு நிறம் உருவ அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ரகத்தில் அறுவடை செய்வதற்கு 30 நாட்கள் முன்னதாக மாலிக் ஹைட்ரசைடு லிட்டருக்கு 1000 மி.கிராம் கார்பண்டசிம் என்ற அளவில் தெளித்தால் விளைச்சல் அதிகரிப்பதோடு விளைபொருட்களின் தரம் மேம்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தெளித்த பயிரிலிருந்து பெறப்பட்ட வெங்காயம் 2 செ.மீ. நுனியுடன் வைத்து பதப் படுத்தப்படுவதால் முளைத்தல் கட்டுப்படுத்தப் பட்டு சேமிப்புக்காலம் அதிகரிக்கிறது. இவ்வாறு பதப்படுத்திய வெங்காயத்தினை குறைந்த செலவிலான அடிப்பகுதியில் காற்று புகும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட சேமிப்புக் கட்டமைப்பில் எவ்வித ஊட்டச்சத்து மற்றும் தரக்குறைபாடுகள் இன்றி 6 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.நீண்டகால சேமிப்பு நுட்பங்கள்: அறுவடை செய்வதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக மாலிக் ஹைட்ரசைடு லிட்டருக்கு 2000 மிலி, கார்பன்டசிம் லிட்டருக்கு 1000 மில்லிகிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். தற்போது மாலிக் ஹைட்ரசைடு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக வேறு வளர்ச்சி தடுப்பு வேதிப்பொருட்களை சைகோசெல் லிட்டருக்கு 200 மில்லி கிராம் மற்றும் கார்பன்டசிம் லிட்டருக்கு 1000 மில்லிகிராம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.அறுவடை செய்யப்பட்ட வெங்காய குமிழ்களை இலையுடன் 3 நாட்கள் வயலிலும் 2 நாட்கள் நிழலிலும் வைத்து உலர்த்த வேண்டும். பிறகு வெங்காய குமிழ்களின் கழுத்திலிருந்து 2 செ.மீ. நீளம் விட்டு அறுத்தல் வேண்டும். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட வெங்காயத்தை குறைந்த செலவிலான அடிப்பகுதியில் காற்று புகும் வண்ணம் அமைக்கப்பட்ட சேமிப்புக் கட்டமைப்பில் சேமித்து வைப்பதன்மூலம் வெங்காயத்தில் எவ்வித ஊட்டச்சத்து மற்றும் ஈரக்குறைபாடுகளின்றி 6 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.சேமிப்பு கட்டமைப்பு: குறைந்த செலவிலான அடிப்பகுதியில் காற்றுப்புகும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட சேமிப்பு கட்டமைப்பு ஒற்றை வரிசை கொண்டது. இந்த சேமிப்பு அமைப்பில் 5 டன் வரை சேமிக்கலாம். இந்த சேமிப்பு அமைப்பு மூங்கில்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இவ்வமைப்பில் மேற்கூரை தூண்கள், அடித்தளம் போன்றவை மூங்கிலினால் அமைக்கப்படுகின்றன. 5 அடி இடைவெளியில் தூண்கள் அமைக்கப் படுகின்றன. இவ்வமைப்பு இரும்பு தூண்க்ள மூலம் தூக்கி நிறுத்தப்பட்டு அடிப்பகுதியில் காற்றோட்டம் இருக்குமாறு வடிவமைக்கப் படுகிறது. இவ்வமைப்பின் மேல்கூறை தென்னை ஓலை கொண்டு வேயப்படுகிறது. இவ்வமைப்பு வடக்கு-தெற்கு முகமாக அமைக்கப்பட வேண்டும்.அளவு: நீளம்-4.5மீ, அகலம்-1.2மீ, பக்க உயரம் - 1.5மீ, நடுப்பகுதி-1.8மீ, அடிப்பகுதி-30ச.மீ., காற்றோட்டம்.கட்டுமானப்பொருள்:கட்டமைப்பு கூறை : பிளவுபடாத மூங்கில்,தென்னை ஓலைகளை மூங்கில் சட்டத்தின்மேல் வேய்தல்பக்க சுவர்கள் : தாங்கியின் உதவியுடன் கூடிய பகுதி பிளவுபட்ட மூங்கில்தளம் : செங்கல் தூண்கள் துணையுடன் கூடிய பிளவுபட்ட மூங்கில்(தகவல்: முனைவர் வே.அன்புக்கரசி, முனைவர் ப.பரமகுரு, முனைவர் இல.புகழேந்தி, தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்:0422-661 1283).-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !