ADDED : ஆக 22, 2012 | ADDED : ஆக 22, 2012
மாடுகளில் மலட்டுத்தன்மை:
மாடுகள் தற்காலிகமாக சினைபிடிக்காத நிலையே மலட்டுத் தன்மையாகும். அதாவது ஒரு மாட்டிலிருந்து ஒரு வருடத்திற்கு ஒரு கன்று பெற முடியாத நிலையாகும். மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் காரணிகளில் மாடுகளக்கு கருவூட்டல் செய்யப்படும் தருணம் முக்கிய மானதாகும். சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்ட 6 முதல் 8 மணி நேரத்திற்கு பிறகு சினைக்குச் சேர்க்க வேண்டும். பொதுவாக மாடுகள் சினை தருணத்தை 8 முதல் 24 மணி நேரம் அளவிற்கு வெளிப்படுத்தும். மாடுகளில் காலையில் சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டால் மாலை வேளையிலும் மாலையில் சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டால் காலை வேளையிலும் சினைக்குச் சேர்க்க வேண்டும்.மாடுகளை பொலி காளைகளுக்குச் சேர்ப்பதைவிட செயற்கை முறையில் கருவூட்டல் செய்வதே சிறந்ததாகும். செயற்கை முறை கருவூட்டலில் நன்கு சுத்திகரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகளை உபயோகப்படுத்துவதால் நோய் பரவும் விதம் தடுக்கப்படுவதுடன் மாடுகளில் கருத்தரிக்கும் திறனும் அதிகரிக்கிறது. செயற்கை முறை கருவூட்டல் செய்ய சந்தர்ப்பம் இல்லை எனில் நல்ல தரமுடைய நோயற்ற பொலிகாளைகளுடன் சினைக்குச் சேர்க்கலாம்.ஊமைச்சினை அல்லது பொயச்சினை மூலமும் மாடுகளில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வகை மாடுகள் சினைப்பருவ அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்தாது. ஆனால் ஆசன வாயைப் பரிசோதனை செய்து பார்த்தால் மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பது தெரியும்.மாடுகளை சினைக்குச் சேர்க்க மருத்துமனைக்கு அழைத்துவரும் பொழுதும் சினைக்கு சேர்த்தபிறகு அழைத்துச் செல்லும்போதும் அடித்து வேகமாக ஓட்டிச்செல்லக்கூடாது. சினைக்குச் சேர்த்தபிறகு மாடுகளை 10 முதல் 15 நிமிடமாவது கட்டி வைத்து பிறகு அழைத்துச்செல்ல வேண்டும். சில மாடுகளை கன்று ஈன்ற பிறகு பல மாதங்களுக்குப் பிறகு சினையூட்டல் செய்கிறார்கள். ஏனெனில் உடனடியாக மாடுகள் சினைப்பட்டால் பால் உற்பத்தி குறைந்துவிடும் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. ஏனெனில் கன்று ஈன்ற 60 முதல் 90 நாட்களுக்குள் மாடுகள் வெளிப்படுத்தும். சினைப்பருவத்தில் சினைக்குச் சேர்க்கவில்லை எனில் மாடுகளில் சினைபிடிக்கும் தன்மை குறைந்துவிடுவதுடன் வருடம் ஒரு கன்று பெற முடியாத நிலை ஏற்பட்டு தேவையற்ற தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவுகளால் பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றைத் தவிர்க்க மாடுகளை குறித்த நேரத்தில் சினைக்குச் சேர்க்க வேண்டும்.பொதுவாக கிடாரிக் கன்றுகளை சினைக்குச் சேர்க்கும்போது அதனுடைய வயது, உடல் எடை, கருப்பையின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ள வேண்டும். பசுக்கன்றுகளாக இருந்தால் ஒன்றரை வயதிலும் எருமைக் கன்றுகளாக இருந்தால் 3 வயதிலும் சினைக்குச் சேர்க்க வேண்டும். கன்றின் உடல் எடையும் உருவமும் தாயைப்போல் மூன்றில் இரண்டு மடங்கு இருக்க வேண்டும். கருப்பை வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும்.வைட்டமின்கள் கால்நடைகளில் சினைப் பருவத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. அதாவது கருப்பையில் உள்ள எபித்தீலிய செல்களைப் புதுப்பித்துக்கொள்ள இந்த வைட்டமின்கள் மிகவும் அவசியமாகும். எனவே வைட்டமின்கள் பற்றாக்குறை ஏற்படும்பொழுது மாடுகளில் சினைபிடிக்கும் தன்மை குறைவதுடன் மலட்டுத் தன்மை, ஆரம்பகால கருச்சிதைவு போன்றவைகளும் நடைபெறும். அதேபோல் பசுந்தீவனம் மட்டும் அளிக்கப்படும் பகுதிகளில் பாஸ்பரஸ் தாது உப்பின் பற்றாக்குறை ஏற்பட்டு மலட்டத்துன்மை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மாடுகள் சினைபிடிப்பதில் தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.நமது நாட்டைப் பொறுத்தமட்டில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவதில் தீவனப் பற்றாக் குறையே முக்கிய பங்கு வகிக்கின்றன. தீவனப் பற்றாக்குறையால் ஏற்படும் மலட்டுத் தன்மையை ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றன என்று அறுதியிட்டுக் கூற முடியாது.சமச்சீர் தீவனம் அளிப்பதன் மூலம் தீவனப் பற்றாக்குறையால் ஏற்படும் மலட்டுத் தன்மையை சரிசெய்ய முடியும். (தகவல்: ம.பழனிச்சாமி, ச.மனோகரன், மா.செல்வராஜு, கா.ரவிக்குமார், வை.பிரபாகரன், ரா.எசகியால் நெப்போலியன், கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்-637 002)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்