நவீன தொழில்நுட்பம்
குதிரை மசால் கோ.2: தீவனப்பயிர்களின் இராணி என்று அழைக்கப்படும் குதிரைமசால் புரதச் சத்திற்காகவும், அதிக சுவைக்காகவும் கால்நடைகளால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது. குதிரைமசால் ஒரு பல்லாண்டு காலப்பயிராகும். தமிழ் நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தீவனப்பயிர் துறையிலிருந்து குதிரைமசால் கோ.2 என்ற புதிய இரகத்தை கடந்த ஆண்டு வெளியிட்டது. தற்போது சாகுபடியில் உள்ள கோ.1 இரகம் 1980ம் ஆண்டு வெளியிடப்பட்டது.குதிரை மசால் கோ.2 சராசரி பசுந்தீவன விளைச்சலாக ஒரு ஆண்டில் எக்டருக்கு 130.6 டன் கொடுத்துள்ளது. இது கோ.1 இரகத்தை விட 25.9 சதம் அதிகமாகும்.பசுந்தீவன விளைச்சலும் அதன் தரமும் ஒருங்கே ஏற்ற முகத்துடன் இணையப்பெற்றது இந்த புதிய இரகத்தின் சிறப்பாகும். அதிக புரதச்சத்தை (23.5 சதம்) கொண்டுள்ளதால் அதிக புரத விளைச்சலுக்கு (5.16 டன் /எக்டர்/வருடம்) ஏதுவாகின்றது. இதன் உலர் எடை விளைச்சல் ஒரு எக்டருக்கு ஒரு ஆண்டில் 21.94 டன் ஆகும். இது கோ.1 (20 சதம்)ஐ விட சற்றே குறைந்தளவு நார்ச்சத்தை (19.2 சதம்) கொண்டுள்ளதால் அதிக செரிமானத்திற்கு ஏற்றதாக உள்ளது. நுண்ணூட்டச்சத்துக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம் கோ.1ஐக் காட்டிலும் அதிக அளவில் உள்ளது. இதன் பச்சைய அளவும் அதிகமாக உள்ளதால் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஏற்றது. அதிகத் தண்டுகள் (15.20) மிருதுவான கரும்பச்சை இலைகள், அதிக இலைக்காம்புகள் (9-11), இலைத்தண்டு விகிதம் (0.47) உடையதாக உள்ளது. இப்பண்புகளால் அதிக சுவையுடன் இருப்பதால் கறவை மாடுகள், செம்மறி ஆடுகள், ஆடுகள், ஈமுகோழிகள் மிகவும் விரும்பி உண்ணுகின்றன.குதிரை மசால் கோ.2ன் அடர்த்தியான, கொத்துக் கொத்தாக பூக்கும் திறன் கூடுதல் விதை உற்பத்திற்கு (18.2 சதம்) வழி வகுக்கிறது. இதன் சிறப்பு- விரைவாக தழைக்கும் திறன், குறுகிய காலத்தன்மையால் கூடுதல் அறுவடை மேற்கொள்ள வேண்டும்.சாகுபடி குறிப்புகள்: ஆண்டு முழுவதும் இறவைப்பயிராகப் பயிரிடலாம். அதிக வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு ஏற்றதல்ல. வடிகால் வசதியுள்ள கரிசல் நிலம், களர் நிலங்களுக்கும் ஏற்றது.இரண்டு முதல் மூன்று முறை உழவு செய்தபின் பாத்தியாக பிரிக்க வேண்டும். அடியுரம், தொழு உரம், 25 டன் /எக்டர் தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 120 கிலோ, சாம்பல் சத்து 40 கிலோ அளிக்க வேண்டும்.விதை அளவு: 15 கிலோ / எக்டர்இடைவெளி: விதைகளை வரிசைக்கு வரிசை 25 செ.மீ இடைவெளி விட்டு தொடர்ச்சியாக விதைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப களை எடுக்க வேண்டும். பயிர் பாதுகாப்பு பொதுவாக தேவையில்லை.நீர்ப்பாசனம்: விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சி, மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் கொடுத்த பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.அறுவடை: முதல் அறுவடை விதைத்து 60-65 நாட்களிலும் பின்னர் 20-25 நாட்களுக்கு ஒரு முறையும் செய்ய வேண்டும். பசுந்தீவன விளைச்சல் - 130 டன்கள்/ எக்டர் / ஆண்டு -(14 அறுவடைகளில்) தகவல் : முனைவர்கள் : ச.பாபு, சி.ஐயனார், அ.கலாமணி, தீவனப்பயிர்துறை, த.வே.ப.கழகம், கோவை-641 003. போன்: 0422 - 661 1228.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.