உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பம்

வில்வம்பழ மர சாகுபடி : சிவ தலங்களில் இலைகளை வைத்து வழிபடும் இம்மரத்தின் பயன்கள் பலவாகும். வில்வம் பழம் 31.8 சதம் மாவுச்சத்து, ரிபோப்ளேவின் 1.19 மி.கி, மருத்துவத்தன்மைக் கொண்ட மார்மெலோசின் உள்ளது. பழத்தில் பீனால் அதிகம் உள்ளதால் துவர்ப்புத்தன்மை கொடுக்கும். வில்வம் பழத்திலிருந்து மதிப்புகூட்டின பொருட்களான ஜாம், சிரப்பு,ஸ்குவாஷ், டாப்பி, மிட்டாய் தயாரிக்கலாம். வில்வம் பழத்திலிருந்து 69 காப்புரிமை பெற்ற பொருட்கள் உள்ளன. பஞ்சுமுல், எஜேல்போலியா, தாஸ்முலாரிஸ்ட் ஆகியன விற்பனையில் உள்ளன. பழுத்த பழம் உடலுக்கு டானிக்காக செயல்பட்டு, புத்துணர்ச்சி கொடுக்கும். ரத்தம் உறைதலை துரிதப்படுத்தும். மனதிற்கும் மூளைக்கும் நல்லது. வேரிலிருந்து கசாயம் தயாரித்து சாப்பிட்டால் அடிபட்ட காயம், வீக்கம் குறையும். மரப்பட்டை நீரிழிவு நோயினை குறைக்கும்.வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலத்தில் நன்றாக வளரும். களர், உலர் (உப்பு மண்), சரளை மண் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களிலும் வளர்க்கலாம். மண் ஆழம் 3 அடி இருக்க வேண்டும். வெப்பம் மிகுந்த, குளிர் குறைந்த மித வெப்பமண்டலம், வெப்ப மண்டலம் பகுதிகளில் வளரும்.இரகங்கள் : மிர்சாப்பூரி, தரோகன் ஜீ, ராம்பூரி, காசி கோண்டா, எட்டாவா, சிவன், டியோரியா, அசமாத்தி, கமாரிரியா ஆகியன பழமை வாய்ந்த இரகங்களாகும். நவீன அதிக மகசூல் தரும் இரகங்கள் வட இந்தியாவில் பாசியாபாத், பந்த்நகர், லக்னோ இடங்களிலிருந்து வெளியிடப்பட்டுள்ளன.நரேந்திர வில்வம் - 5 - நடவு செய்த சில ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கும்.நரேந்திர வில்வம் - 7 - மரம் 5 முதல் 7 மீட்டர் உயரம் வரை அதிக பரவாமல் வளரக் கூடியது.நரேந்திர வில்வம் - 9 - மரம் 4 முதல் 6 மீட்டர் உயரம் நன்கு படர்ந்து வளரும்.பந் சிவானி - உயரமாக, வேகமாக கிளைகள் நெருக்கமாக நேராக படராமல் வளரக்கூடியது. பழம் நல்ல உருண்டையான வடிவம் கொண்டு 1.2 முதல் 2 கிலோ வரை எடை கொண்டது.பந் ஊர்வசி - சில ஆண்டுகளிலேயே அதிக விளைச்சல் தரக்கூடியது.சிஐஎஸ்எச்பி -1 - நடுத்தர உயரம் வரை படராமல் வளரும்.சிஐஎஸ்எச்பி -2 - மரம் படர்ந்து வளரும்.கோமா யாசி - குட்டையான வளர்ந்து தொங்கும் கிளையுடையது.நடவு கன்று : விதைகளை மரத்திலிருந்து எடுத்தவுடன் விதைத்து வேர் செடிகள் உற்பத்தி செய்து கொள்ளலாம். பேட்சி பட்டிங் முறையில் செப்டம்பர் மாதத்தில் 70 சதம் மொட்டு கட்டிய கன்றுகள் கிடைக்கும். மென்தண்டு முறையிலும் ஒட்டுக் கட்டலாம்.நடவு : 3 அடி ஆழ அகல குழிகளை 8 மீட்டர் இடைவெளியில் எடுத்து ஜூன் - ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்யலாம். குழியில் 50 கிலோ எரு, ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். 10-15 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.உரமிடுதல் : 10 ஆண்டு வயது மரத்திற்கு 50 கிலோ எரு, ஒரு கிலோ யூரியா, 1.5 கிலோ சூப்பர், 750 கிராம் பொட்டாஷ், உரங்களை ஆடி - ஆவணி மாதங்களில் மழைபொழியும் பொழுது இடவேண்டும்.மரத்தினை வடிமைத்தல் : நடவு செய்த கன்றுகளை குச்சி கொண்டு கட்டவும். ஓர் ஆண்டுக்குப் பிறகு ஏப்ரல் - மே மாதத்தில் 3 அடி உயரத்தில் வெட்டி விட வேண்டும். வெட்டு பகுதி கீழ் இருந்து நிறைய கிளைகள் உருவாகும். அதனை 6 மாதங்கள் கழித்து 4 கிளைகளை பாதியளவு விட்டு வெட்டி விட வேண்டும். இதிலிருந்து ஒவ்வொன்றிலும் 4 கிளைகள் விட்டு வளர விட வேண்டும்.மே- ஜூன் மாதங்களில் பூக்க ஆரம்பித்து பிஞ்சுகளை ஜூலை மாதத்தில் தெரிய தொடங்கும். பிஞ்சுகள் உதிர்ந்தால் என்.ஏ.ஏ.20 பிபிஎம் தெளிக்க வேண்டும். மரங்கள் 3-4 வருடங்களில் காய்க்கத் தொடங்கும். விதைக்கன்று மரங்கள் 7-8 வருடங்களாகும். 10 ஆண்டுகள் ஆன மரம் 150 முதல் 200 பழங்கள் கொடுக்கும். ஜனவரி - மார்ச் மாதங்களில் விலை அதிகம் கிடைக்கும். (தகவல் : முனவர் வ.கிருஷ்ணமூர்த்தி, முனைவர் மு.அசோகன், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை - 622 303.போன் : 04322 - 296 077).- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !