உள்ளூர் செய்திகள்

ஊசி ஈ

பட்டுக்கூடுகளை சேதப்படுத்தி பட்டு விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி பட்டுப்புழுவில் ஒரு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும் ஒரு வகை பூச்சி இனமே இந்த ஊசி ஈ. இதன் பெயர் எக்ஸோரிஸ்டா பாம்பிசிஸ் 1980ல் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கும் பின் அங்கிருந்து தமிழ்நாடு, ஆந்திரா என பரவலாக தென்பட ஆரம்பித்தது. 1982ல் ஊசி ஈயின் தாக்குதல் அதிகமாக இருந்ததை தெரிந்து கொண்ட பிறகு ஊசி ஈயை கட்டுப்படுத்த பலவிதமான தடுப்பு முறைகள் பட்டுப்புழு வளர்ப்பில் கையாளப்பட்டது.ஊசி ஈ தன் வாழ்நாளில் 500 - 600 முட்டைகள் வரை இடும். ஒரு ஈ ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டுமே ஒரு புழுவில் மேல் இடுகின்றது. இவை 2-3 நாட்களில் புழுக்களாக மாறி பட்டுப்புழுவின் உடலுக்குள் சென்று 5-8 நாட்கள் வரை ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்து விட்டு பின் பட்டுப்புழுவின் உடலை துளைத்து கொண்டு வெளியே வந்து விடுகின்றது. இதனால் பட்டுப்புழுவின் வளர்ச்சி தடை படுகின்றது. வெளியே வரும் புழுக்கள் 15-20 மணி நேரத்தில் கூட்டுப்புழுவாக மாறி 10-12 நாட்கள் கூட்டுப்புழுவாக இருந்து பின் ஊசி ஈயாக வெளிவருகின்றது. வெளியே 13-20 நாட்கள் வரை வாழும் பெண் ஊசி ஈ, 2வது நாளில் இருந்து முட்டை இட ஆரம்பிக்கின்றது.ஊசிஈ தாக்குதலுக்கு உள்ளான பட்டுப்புழுக்களின் மேல் கறுப்பு நிறத்தழும்புகளும் பட்டுக்கூடுகளில் சிறிய துவாரம் காணப்படும். இது தான் ஊசி தாக்குதலின் அறிகுறியாகும். இளம் புழு பருவத்தில் தாக்குதல் இருந்தால் புழுக்கள் கூடுகட்டும் முன்பே இறந்து விடுகின்றன. முதிர்நிலை பருவத்தில் இதன் தாக்குதல் இருந்தால் மெல்லிய கூடுகளும் அல்லது நூற்புக்கு உதவாத கூடுகள் மற்றும் எடைகுறைவான கூடுகளும் உண்டாகும். இதனால் பட்டுக்கூடுகளின் தரம் குறைவதோடு நல்ல விலையும் கிடைக்காமல் போய்விடுகின்றது. அதனால் தகுந்த பாதுகாப்பு மேலாண்மை செய்யவில்லை எனில் பொருளாதார இழப்பு அதிகமாக இருக்கும் (>20%)பாதுகாப்பு மேலாண்மை: புழு வளர்ப்பு மனையில் நுழைவு வாயிலில் ஒரு முகப்பு அறை நைலான் வலையில் அமைக்க வேண்டும். புழு வளர்ப்பு அறை முழுவதும் நைலான் வலையால் பாதுகாப்பு செய்ய வேண்டும். ஜன்னல் மற்றும் காற்றோட்டத்திற்காக புழு வளர்ப்பு மனையில் அமைத்திருக்கும் பகுதி கள் எல்லாம் நைலான் வலையால் மூடப்பட்டிருக்க வேண்டும். தண்டுடன் கொண்டு வரும் மல்பெரி இலைகளில் ஊசிஈ இல்லை என்று உறுதி செய்த பின்பே புழு வளர்ப்பு மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.ஊசிஈ பொறி : ஊசிஈ மாத்திரையை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து வெள்ளை நிற பிளாஸ்டிக் தட்டுகளில் ஊற்றி கதவு மற்றும் ஜன்னல் பகுதிகளில் தரையில் இருந்து 3 அடி உயரத்தில் வைக்க வேண்டும்.ஒட்டுப்பசை: பல்லி, எலி, கரப்பான் பூச்சி போன்றவற்றை பிடிப்பதற்காக கடைகளில் ஒரு ஒட்டுப்பசை அட்டை விற்கப்படுகின்றது. இதை சிறிய கஙஇ பைப்புகளில் தடவி புழு வளர்ப்பு மனை வெளிப்பகுதியில் ஆங்காங்கு கட்டி தொங்க விடும் போது பறந்து வரும் ஊசிஈ இதில் ஒட்டிக் கொள்கின்றது.ஊசி பவுடர்: இது ஊசி ஈயை முட்டை பருவத்திலேயே அழித்து விடும் தன்மையுடையது. 100 முட்டை தொகுதிக்கு 4 கிலோ பவுடர் தேவைப்படும். மூன்றாம் பருவத்தில் இருந்து இந்த பவுடரை பயன்படுத்தலாம். பவுடரை தூவி அரை மணி நேரம் கழித்து உணவு அளிக்க வேண்டும். ஒவ்வொரு பருவத்திலும் தோலிலிருந்து வந்த பின் 2ம் நாளிலிருந்து ஒருநாள் விட்டு இதை தூவ வேண்டும்.உயிரியல் முறை: உயிரியல் முறையில் ஊசிஈயை கட்டுப்படுத்த நிஸோலின்க்ஸ் தைமஸ் என்ற ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம். இது ஊசிஈயின் கூட்டுப்புழுக்களில் முட்டை இட்டு அதை கூட்டுப்புழு பருவத்திலேயே அழித்து விடுகின்றது. 100 ஊசி ஈயின் முட்டைத் தொகுதிகளுக்கு 2 பைகள் என்ற அளவில் ஐந்தாம் பருவத்தில் 2வது நாளில் புழு வளர்ப்பு தாங்கிகளில் கட்ட வேண்டும்.இந்த முறைகளை எல்லாம் தொடர்ந்து கடைபிடிக்கும் போது ஊசிஈக்களின் தாக்குதல் படிப்படியாக குறைந்து விடும்.டி.சிவசுப்ரமணியன், ஏ.ஞானகுமார் டேனியல், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி விரிவாக்க மையம், மதுரை-625 402.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !