உள்ளூர் செய்திகள்

பண்ணைக் குட்டைகள் ஏன் அவசியம் அதிகாரி விளக்கம்

மானாவாரி பகுதியில் பண்ணைக் குட்டைகளை ஏன் அமைக்க வேண்டும் என்பதற்கு, நீர்மேலாண்மை நிறுவன துணைஇயக்குனர் ராஜேந்திரன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு 32 சதவீதம் தென்மேற்கு பருவமழை காலத்திலும், 48 சதவீதம் வடகிழக்கு பருவமழையாலும், 5 சதவீதம் குளிர்காலத்திலும், 15 சதவீதம் கோடையிலும் மழை கிடைக்கிறது. பருவமழையின் அளவு, பொழியும் நாள், நேரம் ஆகியவற்றை நிர்ணயிக்க முடியாத தன்மை நிலவுவதால், விவசாயம் தொடர்பான முடிவுகள் எடுத்தல், நீர்ஆதாரத்தை பயன்படுத்தும் முறையில் தெளிவின்மை உள்ளது. இதனை சரிசெய்ய பண்ணைக் குட்டைகள் மிகவும் அவசியம். பண்ணைக் குட்டைகளை விவசாய நிலங்களில் எளிதில் அமைக்கலாம். இதற்கு தேர்வு செய்யப்படும் இடம், வயல்களின் மொத்த வடிகால்களையும் ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும். குறைந்தது 10க்கு 10 மீ., நீள, அகலம் உள்ளதாக அமைக்க வேண்டும். மானாவாரியில் 40க்கு 40 மீ., யில் அமைப்பது நல்லது. ஆழம் 2 மீ.,க்கு மிகாமல் இருக்க வேண்டும்.பண்ணை குட்டைகளில் நீர் தேக்குவதன் மூலம். அது வீணாவதை தவிர்க்கலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பெருகும். உபரிநீரின் அளவை பொறுத்து, பண்ணைக் குட்டையில் மீன் வளர்க்கலாம். வீட்டு தோட்டம் அமைக்கவும், பண்ணைக் காடுகள் வளர்க்கவும், நாற்றுக்களை பராமரிக்கவும், கால்நடைகள், இயந்திர சாதனங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். ஆண்டுதோறும் குட்டைகளை தூர்வாருதல் அவசியம். அங்கு வளரும் பாசி தாவரங்களை அகற்ற வேண்டும். குட்டைகளை சுற்றி மரங்களை வளர்த்து சுற்றுச் சூழலை பேண வேண்டும். இதன் மூலம் பண்ணைக் குட்டையின் முழுப்பலனை பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !