கிணற்று பாசனத்தில் நெல் சாகுபடி: ஏக்கருக்கு 8 டன் மகசூல் சாதனை
கிணற்று பாசனத்தில் திருந்திய நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 8 டன் மகசூல் செய்த சோழவந் தான் விவசாயி சேகர்,40, சாதனை படைத்துள்ளார். இவர், தனது 3 ஏக்கர் நிலத்தில் எல்.எல்.ஆர்., 34449 குறுகிய நெல் ரகத்தை பயிரிட்டார். அவர் கூறியதாவது: கிணற்று பாசனத்தின் மூலம் 'அட்மா' திட்டத்தில், திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிட்டேன். வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராமநாதன் அடிக்கடி நடத்திய ஆய்விலும், வேளாண் அலுவலர்கள் பானுமதி, மார்க்கண்டன் அறிவுரையில், அடி உரமாக அசோஸ்பையிரில்லம், காம்ளக்ஸ் மேலூரமாக யூரியா, பொட்டாஷ் இட்டு, கோளடாவீடர் கருவி மூலம் மூன்று முறைகளை எடுக்கப்பட்டது. பூச்சிமருந்து தெளிக்கப்பட்டது. உரச் சிக்கனத்துடன் செலவினமும் குறைந்தது. சில நாட்களுக்கு முன், அறுவடை செய்யப்பட்டு, 8 டன் கூடுதல் மகசூல் பெற்று அதிக லாபம் கிடைத்தது, என்றார். உதவி இயக்குனர் ராமநாதன் கூறியதாவது: திருந்திய நெல் சாகுபடி திட்டத்தில், கிணற்று பாசனம் மூலம் போதியளவு தண்ணீரை வைத்து, சேகர் 25 க்கு 25 செ.மீ இடைவெளியில் எல்.எல்.ஆர்.,34449 ரக நெல் நாற்றுநடவு செய்தார். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. நெல்மணியில் பால்பிடிக்கும் பருவத்தில், விளைச்சலுக்கேற்ப குறிப்பிட்ட அளவில் காம்பளக்ஸ், யூரியா, பொட்டாஷ் உரங்கள் இடப்பட்டன. தேவையான அளவு தண்ணீர், உரம் இட்டதால் நாற்றில் 65 சிம்புக்கு மேல் வளர்ந்தது. ஒவ்வொரு சிம்பிலும் உருவான கதிரில் 500க்கு மேல் நெல் மணிகள் இருந்தது. அறுவடை நேரத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சாதாரணமாக மூன்றரை டன் கிடைக்கும்பட்சத்தில், கிணற்று பாசனத்தில் 8 டன் கூடுதல் மகசூல் கிடைத்திருப்பது வேளாண்மை அலுவலர்களின் பெருமுயற்சியில் அமோகவிளைச்சல் ஒரு மைல் கல், என்றார். இது எப்படி சாத்தியமானது என விவசாயி சேகரிடம் கேட்க 81249 22620ல் கேட்கலாம்.