கால்நடைகளுக்கு அளவான பொங்கல்: அமில நோயிலிருந்து காக்க சிறந்த வழி
பொங்கல் பண்டிகை யின் போது மாடுகளுக்கு அளவுக்கு மீறி சர்க்கரை பொங்கல் சாப்பிடக் கொடுப்பதால் அமில நோய் ஆபத்து ஏற்படலாம். இந்நோய் வயிறு உப்புசம் மற்றும் திடீர் இறப்பை மாடுகளுக்கு உண்டாக்கும். எளிதில் நொதிக்கக்கூடிய மாவுச்சத்து நிறைந்த உணவு பொருட்களான சோளம், மக்காச்சோளம், கோதுமை, அரிசி, பயிறு வகைகள் மற்றும் அரிசி சாதம், பொங்கல் போன்றவைகளை திடீரென்று அதிகளவில் கால்நடைகள் சாப்பிடுவதே இந்நோய்க்கான மூல காரணம். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு முறையான சிகிச்சை உடனடியாக அளிக்கப்படாவிட்டால் 90 சதவீதம் வரை உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.தீவனம் சாப்பிட்ட 2:00 மணி முதல் 6:00 மணி நேரத்துக்குள் நோய் அறிகுறிகள் தென்படும். அமில நோய் பாதித்த கால்நடைகளின் வயிற்றில் 'லேக்டிக் அமிலம்' அதிக மாக சுரந்து செரிமானப் பாதிப்பை உண்டாக்கும். அமில நோய் ஏற்படுவதில் மிதமான நோய் நிலை, தீவிர நோய் நிலை, கடுமையான நிலை என்ற வகையில் பாதிப்புகள் ஏற்படலாம். மிதமான நோய் வகையில் வயிறு உப்புசம் காணப்படும். வயிற்று வலியால் கால்நடைகள் வயிற்றை பின்னங் கால்களால் உதைத்துக் கொள்ளும். அசைபோடாமல் இருக்கும். தீவிர நோய் வகையில் கால்நடைகள் சோர்வுடன் இருக்கும். 24 மணி நேரத்துக்கு மேல் நீடித்தால் கால்நடைகள் எழுந்து நிற்க முடியாமல் படுத்து கொள்ளும்.கடுமையான நிலையில் அதிக சோர்வுடன் கீழே படுத்த நிலையில் வயிற்றின் மேல் தலையை வைத்து கொள்ளும். உடல் உஷ்ண நிலை சராசரிக்கும் குறைந்து விடும். பார்வை குறைபாடு, கெட்ட வாடையுள்ள கழிச்சல் உண்டாகும். கால்நடைகள் தாங்கள் வழக்கமாக சாப்பிடும் தீவனங்களுக்கே தங்களை பழக்கப்படுத்தி கொள்பவை. தீவனத்தில் திடீரென மாறுதல் செய்தால் அவைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு, கடுமையாக உடல் நிலை பாதிக்கக்கூடும். எனவே, புதிதாக கால்நடைகளுக்கு தீவனங்களை கொடுக்கும் போது சிறிது சிறிதாக கொடுத்துப் பழக்கப்படுத்தி பின்னர் அளவை நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு ஓரிரு நாட்களுக்கு குடி தண்ணீர் கொடுக்கக்கூடாது. 7.5 சதவீதம் 'சோடியம் பைக்கார்பனேட்' கரைசலை ஒரு கிலோவிற்கு ஒரு மில்லி என்ற அளவில் கால்நடை டாக்டர் மேற்பார்வையில் ரத்தத்தில் செலுத்த வேண்டும்.'மெக்னிசியம் ஹைட்ராக்ஸைடு' கரைசலை வாய் வழியாக தந்தால் நல்லது. கூடுதலாக 'ஹிஸ்டமைன்' மருந்து, வைட்டமின் பி, டெட்ரா சைக்கிளின் ஆண்டிபயாடிக் மருந்துகளை கால்நடை மருத்துவரின் கண்காணிப்பில் தர வேண்டும்.மேலும் இறைச்சிக் கூடங்களில் கிடைக்கும் ஆட்டு 'ஒதப்பி' (ஆட்டை இறச்சிக்காக அறுக்கும் போது 'ரூமன்' எனும் ஜீரணமாகாத உணவு பொருள்) கரைசலை சூடாக எடுத்து, வெதுவெதுப்பான வெந்நீரில் வடிகட்டி கொள்ள வேண்டும்.வடிகட்டிய தண்ணீரை 3 லிட்டர் அளவுக்கு வாய் வழியாக தரலாம். அந்த தண்ணீரில் நன்மை செய்யும் பாக்டீரியா அதிகளவு உள்ளது. எனவே விவசாயிகள் பொங்கல் பண்டிகையின் போது விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்கள் கால்நடைகளை அமில நோய் ஆபத்திலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். தொடர்புக்கு 94864 69044.- டாக்டர் வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்தறை