வளமான வான் கோழி வளர்ப்பு
வான் கோழி வளர்ப்பும் விவசாயிகளிடையே இக்காலத்தில் ஆர்வமுடன் நடைபெற்று வருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வான்கோழி பிரியாணி தயார் செய்ய போட்டி போட்டு கொண்டு வான் கோழிகளை வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் கொள்முதல் செய்கின்றன. வான் கோழிகளை ராணிக்கெட் நோய், கோழி அம்மை, நீலக்கொண்டை நோய், கழிச்சல் நோய், கோழிக்காலரா, கோழி டைபாய்டு, கொரைகா நோய் போன்ற நோய்கள் தாக்குகின்றன. இதனால் பண்ணையாளர்களின் வான் கோழிகள் தீவனம் சாப்பிடாமை, உடல் எடை குறைவு, குறைந்த அளவில் தீவனத்தை இறைச்சியாக மாற்றும் திறன், உடல் வளர்ச்சிக் குன்றி இருத்தல், ரத்த சோகை, முட்டை உற்பத்தி எண்ணிக்கையில் குறைவு போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.இந்நிகழ்வுகளால் கோழி வளர்ப்பவர்கள் பொருளாதார நஷ்டத்தை சந்திக்கின்றனர். வான் கோழிக்குஞ்சுகள் கோழிக்குஞ்சுகளை போல் சுறுசுறுப்பாக இராது. அவற்றில் சில குஞ்சுகள் தீவனம் சாப்பிடாமல் கூட இருக்கும். இதனால் பட்டினிச்சாவு உண்டாகிறது. இதனை தவிர்க்க அவ்வாறான குஞ்சுகளை இரையை சாப்பிட துாண்ட வேண்டும். முதல் இரண்டு வாரங்களுக்கு வான் கோழிக்குஞ்சுகளை கோழிக்குஞ்சுகளுடன் சேர்த்து வளர்க்க வேண்டும். இப்படி செய்வதால் வான் கோழிக்குஞ்சுகள் பட்டினியால் இறப்பதை தவிர்க்கலாம். வான் கோழிகளுக்கு குடிப்பதற்கு நல்ல தரமான தண்ணீரை கொடுக்க வேண்டும். அவை தாங்கள் உட் கொள்ளும் தீவனத்தின் எடையை போல் நான்கு மடங்கு அளவு தண்ணீர் குடிக்கும்.பண்ணையில் எதிர்பாராத நோய்த் தாக்குதல் ஏற்பட்டால் நோயால் இறந்த வான் கோழிகளை முதலில் அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீரில் கிருமி நீக்க மருந்துகளை கலந்து தர வேண்டும். பழைய ஆழ் கூளத்தை உடனே அப்புறப்படுத்துங்கள். நோய்க்கான காரணத்தை அறிய உடனடியாக கால்நடை மருத்துவரின் ஆய்வுக்குட்படுத்தி தெளிவு பெற வேண்டும். தரமான தீவனம் அளிப்பதன் மூலம் வான் கோழிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். தேவையான தடுப்பூசிகளை உரிய காலத்தில் போட வேண்டும். தொடர்புக்கு 94864 69044.- டாக்டர் வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை.