உள்ளூர் செய்திகள்

அதிக மகசூலுக்கு விதைநேர்த்தி அவசியம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆய்வின்படி தமிழகத்தில் தானிய சேமிப்பின்போது 2 முதல் 4.2 சதவீதம் வரை பூச்சிகளாலும் 2.5 சதவீதம் எலியினாலும் 0.85 சதவீதம் பறவைகளாலும் 0.68 சதவீதம் ஈரப்பதத்தினாலும் வீணாகிறது. நம் முன்னோர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பங்களை பின்பற்றினாலே பூச்சிகளால் ஏற்படும் சேதத்தை தடுக்கலாம். வேம்பின் பயன்கள் சேமிப்பின் போது நெல், பயறுவகை, எண்ணெய்வித்து பயிர்களின் விதைகளுடன் வேப்ப இலைகளைக் கலந்து சணல் சாக்கில் கட்டி வைத்தால் பூச்சிகள் அண்டாது. பயறுவகை விதைகள் சேமிப்பில் ஒரு கிலோ விதைக்கு 20 மில்லி வேப்பெண்ணெய் கலந்து சணல்சாக்கில் கட்டி வைத்தால் பூச்சிகள் உண்ணாது, விதையின் மேல் முட்டையிடுவதும் தடுக்கப்படுகிறது. 10 கிலோ வேப்பவிதையை பொடியாக்கி அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டினால் வேப்ப விதைக்கரைசல் கிடைக்கும். குறுகிய கால விதை சேமிப்பிற்கு சணல் சாக்குகளை வேப்பவிதைக்கரைசலில் நனைத்து நிழலில் காயவைத்து அதில் நெல், பயறுவகைகள், எண்ணெய்வித்துப் பயிர்களின் விதைகளை சேமிக்கலாம். நாய்த்துளசி செடி இலை துவரை, உளுந்து விதைகளை நாய்த்துளசி இலைகளுடன் கலந்து சணல் சாக்கில் சேமித்தால் 3 முதல் 6 மாதம் வரை பூச்சி வராமல் தடுக்கலாம். ஒரு கிலோ எள் விதைகளுடன் 10 கிராம் நெல்மணிகளை கலந்து சேமிப்பதால் எள் விதையை தாக்கும் இந்தியன் மாவு அந்துப்பூச்சி தாக்குலைக் குறைக்கலாம். நெல்லின் கூர்மையான பகுதி பூச்சி கூண்டுப்புழுப் பருவம் அடைவதற்கு தடையாக உள்ளது. கேழ்வரகுடன் வேம்பு அல்லது தும்பை இலைகளை கலந்து வைத்தால் ஓராண்டு வரை பாதுகாக்கலாம். வசம்புப்பொடி வசம்பு சிறந்த பூச்சிவிரட்டி. வசம்பை பொடித்து நெல், பயறு, எண்ணெய் வித்து பயிர்களின் ஒரு கிலோ விதையுடன் 10 கிராம் அளவு சேர்த்தால் பூச்சிகள் அண்டாது. புங்க இலைகளை நெல் விதை மூடைகளுக்கு இடையில் வைத்தால் பூச்சிகள் வராது. துவரை, உளுந்து, பாசிப்பயறு விதைகளை செம்மண் கலவையுடன் கலந்து பயறுவகை விதைகளில் விளக்கெண்ணெய் தடவினால் பூச்சிகள் முட்டையிடுவதை தவிர்க்கலாம். எல்லா வகையான விதை சேமிப்பின்போதும் 5 கிலோ விதைக்கு ஒரு சூடம் என்ற கணக்கில் சேர்த்து சணல் சாக்கில் சேமித்தால் அனைத்து வகை பூச்சிகளும் வராமல் தடுக்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விதையினை வெயிலில் காயவைத்து புதிய கூடம் சேர்த்து சேமிக்க வேண்டும். காய்கறி விதை சேமிப்பில் மாட்டுச்சாணம் ஈர சாணத்துடன் சுரை, பூசணி, பாகல், புடலை, பீர்க்கை விதைகளை கலந்து வரட்டியாகத் தட்டி வெயிலில் காயவைத்த பின் சேமித்தால் ஓராண்டுக்கும் மேலாக பூச்சிதாக்குதல் வராது. சாம்பல் ஒரு பங்கு அளவை சோள விதைகளின் நான்கு பங்கு அளவுடன் கலந்து வைக்கலாம். விதைப்பதற்கு முன், பரிசோதனை செய்தால் பயிர் மகசூலை அதிகரிக்கலாம். விவசாயிகள் தங்களிடம் உள்ள விதையின் முளைப்புத்திறனை அறிந்துகொள்ள மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தை அணுகலாம். -சிவகாமி, விதைப்பரிசோதனை அலுவலர் ராமலட்சுமி, கமலாராணி விதைப்பரிசோதனை அலுவலர்கள் அரசு விதைப்பரிசோதனை நிலையம், மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !