வேளாண் தொழில்நுட்பத்தில் செழிப்பாக வளரும் மரக்கன்றுகள்
ராமநாதபுரம் கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் 'உள் மூடாக்கு' மற்றும் 'மண்பானை' தொழில்நுட்பம் மூலம் பலன் தரும் புங்கன், புளியன், பூவரசன், சப்போட்டா, மா, தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்து செழிப்பாக வளர்ந்து வருகிறது.இங்கு மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து சுற்றுச்சூழல் மேம்பாடு காண கடலோர உவர் ஆராய்ச்சி மைய தலைவர் சாத்தையா மேற்பார்வையில், பேராசிரியர் தாமோதரன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மரங்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் குறைந்தபட்சம் 15 நாள் முதல் 30 நாள் வரை தாக்குப்பிடிக்கும் உள் மூடாக்கு மற்றும் மண்பானை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மைய வளாகத்தில் 55 ஏக்கரில் புங்கன், புளியன், பூவரசன், சப்போட்டோ, மா, தென்னை, சவுக்கு உள்ளிட்ட 720 மரக்கன்றுகள் கடந்த 2017 டிச.7ல் நடவு செய்யப்பட்டது. ஏழு மாதங்கள் கடந்த நிலையில் மரக்கன்றுகள் 97.5 சதவீதம் செழிப்பாக வளர்ந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.முனைவர் சாத்தையா கூறியதாவது: வறட்சியான நிலத்தில் செடிகள் செழிப்பாக வளர தேவையான அளவு தண்ணீர், அடியுரம், மேலுரம் அவசியம். ராமநாதபுரத்தின் மண் வளம் மணல் பாங்கானது. எனவே தண்ணீர் விட்டதும் சிறிது நேரத்தில் பூமி உறிஞ்சி விடும். வேர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காது. எனவே, கோடையில் வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரக்கன்று சாய்ந்து கருகி விடும். இதை தவிர்க்க உள் மூடாக்கு எனும் தொழில்நுட்பம் கையாளப்பட்டது. அதாவது செடியை நடவு செய்யும்போது 5 கிலோ எடையில் தென்னை நார் கழிவுகளை செடியை சுற்றிலும் இட்டு நடவு செய்ய வேண்டும். இதற்கு உள் மூடாக்கு தொழில்நுட்பம் என்று பெயர். இதனால் செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது பூமி உறிஞ்சி விடாமல் தடுத்து நார் கழிவு தன்னகத்தே வைத்து கொண்டு வேர்களுக்கு தேவையான நீரை சிறுக, சிறுக வழங்கும். இதன் மூலம் 15 நாள் வரை செடிக்கு தண்ணீர் விட தேவையில்லை. நார் கழிவுகளின் சத்துக்களையும் வேர்கள் கிரகித்து செழிப்பாக வளரும்.மண்பானை நுட்பம்தேவிபட்டினத்தில் 1964 ல் ஒருங்கிணைந்த தென்னை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண்பானை தொழில்நுட்பம் மூலம் தென்னை கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இது சொட்டு நீர் பாசன முறையின் முப்பாட்டன் தொழில்நுட்பம் எனலாம். அதாவது 7 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண் பானையின் கீழ் 3 மில்லி மீட்டர் அளவுக்கு மூன்று துளைகள் இட வேண்டும். துளைக்குள் சணலை விட்டு பானைக்கு உள்ளேயும், வெளியிலும் வருமாறு பார்த்து கொள்ள வேண்டும். செடியின் வேர்களை ஒட்டி பானையை வைத்து, பானையின் வாய்ப்பகுதி வெளியில் தெரியும்படி செடியோடு பானையையும் மண் கொண்டு மூடி விட வேண்டும். பானையில் தண்ணீர் ஊற்றி நிரப்பிய பின் பானையை மூடி விட வேண்டும். சணலில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வேர்களுக்கு தேவையான தண்ணீர் சத்தை தடையின்றி வழங்கி வரும். பானையில் ஒருமுறை தண்ணீர் நிரப்பினால் 30 நாட்களுக்கு தண்ணீர் தேவை இருக்காது. மிகக்குறைந்த தண்ணீரில் அதிக பயனடையலாம்.சூழல் சுற்றுலா ரெடிவெப்ப தாக்குதலை உள் வாங்கி பூமிக்குள் விடாமல் தடுக்கும் 'பேய் குமுட்டி' எனும் செடிகள் தரையில் படர்ந்து வளர விடப்படுகிறது. உள் மூடாக்கு மற்றும் மண்பானை தொழில்நுட்பம் வறட்சியான பகுதிகளில் செழிப்பாக மரங்களை வளர்க்க வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இங்குள்ள மரங்கள் ஐந்து அடி முதல் ஏழு அடி உயரம் வரையிலும், சவுக்கு 15 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. அடுத்தாண்டு கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம் சூழல் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக மாற்றப்படும், என்றார். தொடர்புக்கு : 04567- 230 250.