சின்ன சின்ன செய்திகள்
இயற்கை பண்ணை : சுமார் 60 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது ஆர்கே இயற்கை பண்ணை. இதில் தென்னை, பர்மா தேக்கு, மகோகனி, மலைவேம்பு, மேஞ்சியம் என பலவகை மரங்களைப் பராமரித்து வருகின்றனர். தென்னை மரங்களுக்கு இடையில் 2.5 அடி ஆழம் மற்றும் 3 அடி அகலத்தில் வாய்க்கால் அமைத்து அதில் மண்புழு உரம், மாட்டுச்சாணம், தென்னை ஓலை மற்றும் உரிமட்டைகளைப் போட்டு அதன் அருகில் சொட்டுநீர்க்குழாய் அமைத்து உள்ளதால் தென்னை ஓலையும் உரிமட்டையும் ஈரப்பதத்தை எப்போதும் நிலைநிறுத்தி வைத்துக்கொள்கிறது. இந்த வாய்க்கால் இரண்டு தென்னை வரிசைக்கு இடையில் உள்ளதால் இரண்டு பக்கமும் உள்ள மரங்களின் வேர்கள் உரத்தன்மையையும் நீரையும் எளிமையாகக் கிரகித்துக் கொள்கின்றன. இதனால் இங்குள்ள மரங்கள் எப்பொழுதும் பசுமையாக இருப்பதுடன் கூடுதலான மகசூலும் தருகிறது. மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை இந்த வாய்க்கால்கள் அப்படியே சேமித்து வைத்துக்கொள்கிறது.இயற்கை பண்ணை என்றால் அங்கு நாட்டு மாடுகள் நிச்சயம் இருக்க வேண்டும். 15 மாடுகள் பராமரித்து வருகிறார்கள். பண்ணைக்குள் சாணக்குழிகள் அமைத்து மாடுகளின் சணத்தையும் கோமியத்தையும் சேகரிக்கிறார்கள். சாணக்குழிக்குள் ஜீவாமிர்தம், தசகவ்யம் போன்றவற்றை இட்டு, திரவ நிலையில் உள்ளதை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் மரங்களுக்கும் மரப்பயிர்களுக்கும் இடுகிறார்கள். சாணக்கழிவிலிருந்து இயற்கை எரிவாயு தயாரித்து சமயத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.பண்ணையில் ஆங்காங்கே இத்தாலிய தேனீப் பெட்டியையும் அமைத்துள்ளார்கள். பல இடங்களில் இனக்கவர்ச்சிப் பொரிகளையும் வைத்திருக்கிறார்கள். மலைவேம்பு மரங்களுக்கு இடையில் தென்னை நாற்றுப்பண்ணை அமைத்திருக்கிறார்கள். மேலும் விபரங்களுக்கு: 'ஆர்கே இயற்கை பண்ணை பிரைவேட் லிமிடெட், 5/383, ஆர்கே எஸ்டேட் (கணபதிகவுண்டர் தோட்டம்), கணுவாய்-பன்னிமடை சாலை, கோவை-641 108. போன்: 98439 55522. (உரிமையாளர்: சிவசங்கர், பண்ணை மேலாளர், சுவாமிநாதன்)* வாழை சாகுபடியாளர்கள் கவனத்திற்கு : திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கோவை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு போன்ற வாழை சாகுபடி பகுதிகளில் வாழைமரங்கள் 4 முதல் 5 மாத வளர்ச்சிப் பருவத்தில் உள்ளன. மரம் ஒன்றுக்கு 200 கிராம் யூரியா, 300 கிராம் பொட்டாஷ், 20 கிராம் பென்டோனைட், சல்பர், 50 கிராம் டோலமைட் போன்ற உரங்களை மரத்திலிருந்து 1.5 அடி தள்ளி கிண்ணம்போல் குழிபறித்து இடவேண்டும். அத்துடன் மரம் ஒன்றுக்கு 30 கிராம் பியூரடான் குருணை மருந்தை 5 கிலோ மக்கிய தொழு உரத்தையும் சேர்த்து இடவேண்டும். மேலும் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கும் 'பனானா சக்தி' என்னும் வாழை நுண்ணூட்டச்சத்து கலவையை 2 சத கரைசலாக தகுந்த ஒட்டும் திரவம் சேர்த்து இலைமேல் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20,000 முதல் 25,000 வரை கூடுதல் வருவாய் ஈட்டலாம் என்று திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் எம்.எம்.முஸ்தபா தெரிவிக்கிறார். மேலும் விபரங்களுக்கு: இயக்குனர், தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தாயனூர் அஞ்சல், தோகைமலை சாலை, திருச்சிராப்பள்ளி-620 102 மற்றும் இம்மையத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் கே.ஜே.ஜெயபாஸ்கரனை 93445 53587 அல்லது 99407 88015 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.