சின்ன சின்ன செய்திகள்
பேரிக்காய் ஊட்டி 1 : உதகமண்டலத்தில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் இதுவரை புஷ்பீன்ஸ், ரோஸ்மேரி, தைம், செலரி, சக்கரவர்த்தி கீரை, பாலக்கீரை, காலிபிளவர் உள்ளிட்ட 14 பயிர் இரகங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தின் 15 ஆவது வெளியீடான மெது பேரி ஊட்டி 1 இரகம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.வெண்ணையைப் போன்ற மிருதுவான சதைப்பற்றுடன் நறுமணம் கொண்ட நீண்ட வடிவிலான பழங்களை உடைய இந்த இரகத்தை ஜூன்-ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம். நட்ட 5வது ஆண்டிலிருந்து விளைச்சலைத் தரும். இந்த இரகம் ஏப்ரல், மே மாதங்களில் (குறிப்பாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வரும் காலகட்டத்தில்) அறுவடைக்கு வருவதால் சந்தையில் மிக நல்ல விலை கிடைக்கிறது.ஒரு மாதத்திற்கு 97 கிலோ காய்களை தரவல்லது. ஜாம், ஊறுகாய், பழ ரசம் போன்ற மதிப்பூட்டம் செய்யப்பட்ட பொருள்களைத் தயாரிக்கலாம். இந்த இரகத்தின் பழங்களில் அதிக அளவு கால்சியம், சோடியம், பொட்டாசியம், அஸ்கார்பிக் அமிலம், மாவுச்சத்து, நார்ச்சத்துக்கள் உள்ளன. நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடைக்கானல் பகுதிகளில் பயிரிட ஏற்ற இந்த இரகம் அசுவினிப்பூச்சி, தீக்கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.மேலும் விபரங்களுக்கு: ''முதன்மையர், தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422 -661 1270.மரவள்ளிக்கிழங்கைத் தோண்டும் கருவி: பண்ணைப் பணியாளர்களின் பற்றாக்குறையை போக்க இயந்திரம் மூலம் விதைப்பு, களையெடுப்பு, அறுவடைக்கருவிகள் என இதுவரை த.வே.ப.கழகம் 100 கருவி இயந்திரங்களை வெளியிட்டுள்ளது.மரவள்ளிக்கிழங்கைத் தோண்டும் இப்புதிய கருவியை 50 குதிரைத்திறன் கொண்ட டிராக்டரில் இணைத்து பயன்படுத்தலாம். ஒரு வரிசையாக இருந்தால் நாள் 1க்கு 0.7 எக்டரும், இரண்டு வரிசையாக இருந்தால் நாள் 1க்கு ஒரு எக்டர் வரையும் அறுவடை செய்யலாம். இக்கருவியின் விலை 32,000 ரூபாய் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த கருவியை விவசாயிகள் பயன்படுத்தி லாபம் ஈட்டலாம்.டிராக்டரால் இயங்கும் ஒரு/இருவரிசை மரவள்ளிக்கிழங்கைத் தோண்டும் இந்தக்கருவி பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு முகவரி: ''முதன்மையர், வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422 - 661 1253.இஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்த : பூச்சி தாக்காத நல்ல விதை கிழங்குகளைத் தேர்வு செய்து சேமிக்க வேண்டும். விதைக்கிழங்குகளை டைகுளோரிவாஸ் 2 மி.லி. அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1.5 மி.லி. 1லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து அக்கரைசலில் நனைய வைத்து நிழலில் உலர்த்திய பிறகு நடுதல் வேண்டும். தாக்கப்பட்ட குருத்து, கிழங்கைச் சேகரித்து அழிக்க வேண்டும்.மோனோ குரோட்டோபாஸ் 2.0 மி.லி. அல்லது குளோன்பைரிபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். (தகவல்: முனைவர் சு.இருளாண்டி, முனைவர் ம.இ.மணிவண்ணன், முனைவர் ஜே.ஜேன் சுஜாதா, வேளாண்மை அறிவியல் நிலையம், பேச்சிப்பாறை -629 161, கன்னியாகுமரி மாவட்டம். போன்: 04651 - 181 191. செல்: 94432 81191, 94438 45159.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.