உள்ளூர் செய்திகள்

மண் வளமே மனித நலம்

தீவிர வேளாண்மையின் பயனாக மண் அரிமானம், நீர் பற்றாக்குறை, மண்ணின் களர், உவர் தன்மை அதிகரித்தல், உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி பயன்பாட்டினால் ஏற்படும் மாசு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றால் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.மனித நல்வாழ்வுக்கு மண் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் 2002 டிச.5ல் உலக மண் தினத்தை சர்வதேச மண் அறிவியல் சங்கம் அறிமுகப்படுத்தியது. மண்ணின் ரசாயன, இயற்பியல், உயிரியல் பண்புகள் பயிர்வளர்ச்சிக்கும் விளைச்சலுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். தமிழகத்தின் மண் வகைகளில் கரிமப்பொருட்களின் அளவும் தழைச்சத்தின் அளவும் மிகக் குறைவாக உள்ளது. மண் வள மேம்பாட்டில் இவையிரண்டும் இரு கண்களாக கருதப்படுகிறது. மண்வளத்தை மேம்படுத்த கரிமப்பொருள், தழைச்சத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். வளமான மண்ணில் கனிமம் 45 சதவீதம் நீர் மற்றும் காற்று 50 சதவீதம் கரிமம் 5 சதவீதம் இருக்கும். தமிழகத்தில் 1970களில் 0.8 சதவீதம் என்றிருந்த கரிம அளவு தற்போது 0.4 சதவீதமாக குறைந்துள்ளது.இந்தியாவில் 84 மில்லியன் எக்டேர் அளவு மானாவாரி நிலம் உள்ளது. தமிழகத்தின் துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மானாவாரி கரிசல் மண் காணப்படுகிறது. மானாவாரி உழவர்களுக்காக துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1901 முதல் வேளாண் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது வேளாண் பல்கலையின் கீழ் உள்ள இம்மையத்தில் இருந்து பருத்தி, சோளம், கம்பு, மக்காச்சோளம், பாசிப்பயறு, கேழ்வரகு, தினை, குதிரைவாலி, வரகு, பனிவரகு, சூரியகாந்தி, மிளகாயில் 60 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மண்வள இடர்பாடுகள் என்னென்னகுறைந்த நீர் உட்புகும் திறன், அடிமண் இறுக்கம், இளகிய, ஆழமற்ற நன்செய் நிலம் ஆகியவையும் மண்ணுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தரும். சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் குறைபாடுகளும் களர், உவர், அமில வகை மண்ணும் தொழிற்சாலை கழிவுகளால் மாசுபடும் மண்ணும் பயிர் வளர்ச்சியை தடுக்கும். பாசன நீரால் ஏற்படும் உப்பு கல் படிவதால் மண்ணின் ரசாயன, இயற்பியல் குணங்கள் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான பயிர்களில் நுண்ணுாட்ட சத்து பற்றாக்குறை உருவாகி மகசூலை பாதிக்கிறது.களிமண் நிலம் குறைந்த நீர் உள்ளீட்டு திறன் கொண்டது. மழை நீர் நிலத்தில் தேங்காமல் வழிந்தோடி விடுவதால் பயிர்களுக்கு கிடைக்காது. வளமான மேல் மண்ணையும் அடித்துச் செல்லும். ஒரு எக்டேர் நிலத்தில் 14 முதல் 43 டன் மண் அரிமானம் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இந்த மண் குளம், குட்டை, வாய்க்காலில் வண்டலாக படிந்து நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை குறைக்கிறது. மண் அரிப்பால் ஏற்படும் பாதகத்தில் இதுவும் ஒன்று. மண் பரிசோதனை அவசியம்மண் மேலாண்மை செய்வதில் மண் பரிசோதனையும் மண்வள அட்டையும் முக்கியமானது. மண்வளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை பெற்று அதற்கேற்ப உரம், இடுபொருள் இட வேண்டும். மானாவாரி விவசாயிகள் கோடை உழவு செய்தல், பகுதி பாத்தி அமைத்தல், ஆழச்சால் அகல பாத்தி அமைத்தல், நிலப்போர்வை அமைத்தல், தாவர அரண் அமைத்து மண்ணை பாதுகாத்தல், பண்ணை குட்டை அமைத்து மழைநீரை சேமித்தல் நுட்பங்களை பின்பற்ற வேண்டும். ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்து மண்வளத்தை அதிகரிக்க வேண்டும். நிலத்தின் தன்மைக்கேற்ப பயிர் சாகுபடி செய்ய வேண்டும். மண் வளமாக இருந்தால் மட்டுமே உரம், இடுபொருட்கள் பயிருக்கு பயன்படுவதாக அமையும். மாறிவரும் கால சூழ்நிலையை மனதில் கொண்டு மண்ணை பாதுகாப்பதே எதிர்கால விவசாயத்திற்கான ஒரே தீர்வு.பாக்கியத்து சாலிகா, தலைவர் வேளாண் ஆராய்ச்சி நிலையம் கோவில்பட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !