உள்ளூர் செய்திகள்

புளி சாகுபடி

தமிழ்நாட்டில் சாலைகளி லும், சோலைகளிலும் புளிய மரங்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. இளைப்பாற்றுவதற்கான இளம் காற்றையும், கண் கொண்டு காண்பதற்கான குளிர்ச்சியையும், ஆற அமர தங்கிச் செல்வதற்கான நிழலையும், குழம்பாக்கலுக்கான பழங்களையும், விலை இல்லாத இலைக் கீரையையும், தச்சுப் பணிகளுக்கான தரமான பலகைகளையும், வணிக முறையில் பெரும்பாலான வருவாயையும், மற்றும் எண்ணற்ற மருத்துவத் தன்மைகளையும் நிலையான நன்மைகளையும் காலம் காலமாக நல்கும் நல்ல மரம் புளிய மரம்.வீடுகளில், விருந்துகளில் சமையல் பணிகளுக்கு புளி இல்லை என்றால் சமையல் இல்லை, சாப்பாடும் இல்லை. புளி என்று பாமரரால் சொல்லப்படும் புளியம் பழத்தின் புளிப்புச் சுவை நாக்கு, தொண்டை மற்றும் மூக்குப்பகுதி நரம்புகளைத் தூண்டி வலுவடையச் செய்கின்றது. புளியம்பழச் சதையை குடிநீரில் கரைத்து சர்க்கரை சேர்த்து உண்டாக்கப்படுகின்ற பானக்காரம் தாகத்தைத் தீர்க்கின்றது. புளிய விதையையும், புளிய இலையையும் அவித்துச் சாப்பிட்டு பசியாறும் குடிசை மாந்தரும் குவலயத்தில் உள்ளனர். புளிய விதை நாட்டு மருந்துச் சாதனமாக எண்ணெய் எடுக்கப் பயன்படுகிறது.பயிர் விளைச்சல் இல்லாத தரிசு நிலங்களில் கூட புளிய மரச் சாகுபடி ஓர் உயர்ந்த தொழிலாக விளங்குகிறது. தும்கூர், ஹாசனூர், உரிகம், பி.கே.எம்.1 என்று கூறப்படும் பல்வேறு ரகங்கள் இதில் உள்ளன. இவை தவிர ஆங்காங்கு கிடைக்கின்ற நாட்டுப்புளி, மற்றும் கோடம்புளி ஆகிய ரகங்களும் உள்ளன.பொதுவாக, மணல் கலந்த மண் இதற்குப் பெரிதும் ஏற்றதாகும். ஒரு மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரம் சேர்த்து குழிகளின் மத்தியில் விதைகளை இட வேண்டும். நீர் இட்டு வந்தால், ஒரு வருடத்தில் சீராக வளர்ச்சி அடையும். தொடக்கத்தில் கன்றுகளைக் காப்பதற்கு குச்சிகளை அல்லது சிறு மூங்கில்களை ஊன்றிக் கட்ட வேண்டும். இளமையான மரங்களின் கிளைகள் ஆரம்பத்தில் நேராகவும், பின்பு படர்ந்து பிரிந்தும் செல்லும்.நான்காம் ஆண்டிலிருந்து காய்க்கத் தொடங்கினாலும், ஏறத்தாழ ஒன்பதாவது ஆண்டிலே தான் நற்பலன் உண்டாகும். மழைக்காலத்தில் பூக்கள் தென்படும். ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை நடைபெறும். இத்தகைய புளிச்சாகுபடி ஒரு சிறந்த லாபகரமான விவசாயத் தொழிலாகப் பரிமளிக்கும்.- எஸ்.நாகரத்தினம் விருதுநகர்-626 001.04562 - 242 700


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !