விளாச்சேரி விவசாயிகளின் சங்கமம்
தங்களது நெல்வயல்களில் பூச்சி, நோய் தாக்குதலுக்கு கையாண்ட இயற்கை வழிமுறைகளை மற்ற விவசாயிகளும் பின்பற்றும் வகையில் இயற்கை வேளாண் இடுபொருள் அமைப்பு ஒன்றைத் துவங்கி விவசாயத்தோடு, இடுபொருள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அமைப்பு செயலாளர் ரவிச்சந்திரன், சங்க செயற்குழு உறுப்பினர் மைதீன்பிச்சை கூறியதாவது: விளாச்சேரி விவசாயிகள் சங்கத் தலைவராக சலாம், செயலாளராக ராதா கிருஷ்ணன், பொருளாளராக தாவூது, இயற்கை இடுபொருட்கள் அமைப்பு தலைவராக சர்புதீன், பொருளாளர் நஸ்ருதீன் செயல்படுகின்றனர். இங்கு நெல் பிரதான பயிராகவும் குறைந்த பரப்பில் வாழையும் பயிரிடுகிறோம். 20 விவசாயிகளின் 600 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய ரகங்களான கருப்பு கவுனி, துாயமல்லி, மாப்பிள்ளை சம்பா, ரத்தசாலி, கருங்குறுவை நெல் ரகங்களை மாற்றி மாற்றி பயிரிடுகிறோம். 15 ஏக்கரில் வாழை சாகுபடியாகிறது. நெல்லை அறுவடை செய்து மதுரை திருமங்கலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு செல்கிறோம். அங்கிருந்து வியாபாரிகள் நல்ல விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். சாதாரண ரைஸ் மில்லில் நெல்லை அரைக்க கொடுத்தால் பாலிஷ் செய்யும் போது சத்துகள் வீணாகிவிடும். எனவே ரைஸ்மில் அமைக்க உள்ளோம். நாங்களே இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பதற்காக தனியாக மையம் அமைத்து மீன் அமிலம், பூச்சிவிரட்டி, தேமோர் கரைசல் தயாரித்து விற்கிறோம். இதற்காக திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகம் மூலம் ரூ.ஒருலட்சம் மானியம் கிடைத்தது. ஒவ்வொரு நெல் போகத்திற்கேற்ப 200 லிட்டர் அளவில் தயாரித்து நெல் அறுவடை வரை தேவைக்கேற்ப இவற்றை பயன்படுத்தலாம். இந்த சீசனில் விளாச்சேரிக்கு இப்போது தான் பாசனத்தண்ணீர் கிடைத்தது. நாற்று பாவி நட உள்ளோம். ஒரு லிட்டர் மீன்அமிலம் ஒரு மூடை யூரியாவிற்கு சமமானது. பயிரின் வளர்ச்சிக்கு உதவும். தேமோர் கரைசல் புளித்த தயிரில் தேங்காய்ப்பால் சேர்த்து நெற்கதிர் வெளியே வரும் தருணத்தில் தெளித்தால் ஒரே மாதிரி சீராக கதிர்கள் உருவாகும். இப்பருவத்தில் வரும் பச்சாலை பூச்சிகள் நெற்கதிர் பரியும் தருணத்தை அந்த பாலை குடித்தால் கதிர் கருக்காகவாக மாறிவிடும். தேமோர் கரைசல் தெளித்தால் புளிப்புத்தன்மைக்கு பூச்சிகள் வராது. இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து பூச்சிவிரட்டி தயாரிக்கிறோம். விவசாயிகள் தங்களது தோட்டத்திலேயே இதை எளிதாக தயாரிக்கலாம். ஒரு ஏக்கருக்கு தலா அரை கிலோ அளவு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் எடுத்து தண்ணீர் விட்டு கிரைண்டரில் அரைக்க வேண்டும். அந்த சாற்றை மட்டும் பிழிந்து எடுத்து அதே அளவிற்கு மாட்டுக்கோமியம் சேர்க்க வேண்டும். இதை அதிகபட்சமாக ஒரு மாதம் வரை பயன் படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 15 லிட்டர் கொள்ளவுள்ள டேங்க் தண்ணீருடன் அரைலிட்டர் பூச்சிவிரட்டி கரைசலை சேர்த்து இரண்டு முறை தெளிக்கலாம். நாற்று பாவிய 20 நாளைக்கு மேலும், நட்ட பின் 25 நாளைக்கு மேல் இக் கரைசலை தெளிக்கலாம். செயற்கை பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை விவசாயிகள் எங்களிடம் இயற்கை உரம், பூச்சி விரட்டியை வாங்கலாம். விவசாயிகளே தயாரிப்பதால் எங்கள் பயிருக்கு பயன்படுத்துவதையே மற்ற விவசாயி களுக்கும் வழங்குகிறோம். இயற்கை விவசாயிகள் எங்கள் சங்கத்தில் இணையலாம். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சாகுபடியையும் மனிதர் களுக்கு நஞ்சில்லா உணவையும் வழங்க முடியும் என்றனர். தொடர்புக்கு: 72000 73783. - எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை