உள்ளூர் செய்திகள்

சத்து பற்றாக்குறையால் அழுகும் தக்காளி

தக்காளி அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத காய்கறி பயிர். ஆண்டு முழுவதும் தக்காளியின் தேவை இருப்பதால் கோடை, மழை, பனிக்காலம் என மூன்று பருவத்திலும் சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளியில் நாட்டு ரகங்களும் வீரிய ஒட்டு ரகங்களும் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் மண் பரிசோதனை செய்யாமலேயே தக்காளி பயிரிடும் போது தக்காளியில் பல சத்து பற்றாக்குறைகள் ஏற்படுகிறது. இதில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை அதிகளவு பாதிப்பு ஏற்படுத்துகிறது. குறிப்பாக வீரிய ஒட்டு ரகங்களில் அதிகளவு பாதிப்பு தென்படுகிறது. இளம் செடிகளில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறையால் விரிந்த புதிய இலைகள் மற்றும் வளரும் இலைகளின் நுனிகள் வாடிய நிலையிலும் காய்ந்தும் காணப்படும். இளம் இலைகளின் ஓரம் பழுப்பு நிறத்துடனும் நரம்பிடைப் பகுதி மஞ்சள் நிறத்துடனும் காணப்படும். முற்றிய காய்களில் நுனிப் பகுதி கருகிய நிலையில் அழுகல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.நாட்கள் செல்லச் செல்ல பூசணம் ஏற்பட்டு முழுப்பழமும் அழுகிவிடும். இதனை நிவர்த்தி செய்ய தக்காளி பயிரிடும் விவசாயிகள் ஏக்கருக்கு 1000 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இடவேண்டும். பயிர் பூக்கும் நிலையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் கால்சியம் குளோரைடு அல்லது சுண்ணாம்பு சேர்த்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளித்து தரமான தக்காளிப் பழங்களை உற்பத்தி செய்யலாம்.-- பாக்கியத்து சாலிகா தலைவர்-மனோகரன், சஞ்சீவ்குமார் உதவி பேராசிரியர்கள் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி 94420 39842


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !