உள்ளூர் செய்திகள்

நெல்லில் இலையுறை கருகல் நோய் கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

நெற்பயிரில் இலையுறை கருகல் நோய் கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையம் தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:நெற்பயிரில் இலையுறை கருகல் நோய் என்னும் பூஞ்சாண நோய் பரவி வருகிறது. இது, ரைசக்டோனியா சொலானி எனப்படும் மண்ணின் மூலம் பரவும்.நெற்கதிர் அடிப்பகுதியில், பழுப்பு நிற வட்டம் அல்லது நீளாமாக புள்ளிகள் தோன்றும். புள்ளிகள் பெரிதாகி, ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும். ஏறக்குறைய பாம்பு தோலின் நிறத்தை ஒத்து போகும்.திசுக்கள், நெற்கதிரில் ஊடுருவி, அடிப்பகுதியை பாதிக்கும். நெற்கதிர் பால் பருவத்தை எட்டும் போது, நோய் தீவிரம் அதிகரித்து, இலைகள் காய்ந்துவிடும். இதனால், நெல்லில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பருவத்திற்கு ஏற்ப நெல் விதைகளை தேர்வு செய்ய வேண்டும். நெல் வயலின் துாய்மை, களைச்செடிகளின் கட்டுப்பாடு மற்றும் பயறு வகை பயிர்களோடு பயிர் சுழற்சி முறை செய்ய வேண்டும்.ஒரு ஏக்கருக்கு, 2,000 கிலோ தொழுஉரத்துடன் 60 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து போடலாம். பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற உயிரி கலவையை, நாற்று நட்ட நாளில் இருந்து, 30 நாளில் ஒரு கிலோ போடலாம்.நோய் அறிகுறி தென்பட்டால், பேசில்லஸ் சப்டிலிஸ் 400 கிராம் கண்ணாடி இலை பருவத்தில் தெளிக்கலாம். இவ்வாறு செய்தால், நெல்லில் இலையுறை கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா, திரூர் நெல் ஆராய்ச்சி மையம்,திருவள்ளூர், 97910 15355


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !