உள்ளூர் செய்திகள்

பராமரிப்பு காட்டினால் பணமாய் கொட்டும் முந்திரி

தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி, பிரேசிலில் இருந்து போர்ச்சுக்கீசியர்களால் 16ம் நுாற்றாண்டில் முதன் முதலாக இந்தியாவில் கோவா கடற்கரைப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.தமிழகத்தில் கடலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, கன்னியாகுமரியில் பெருமளவில் முந்திரி பயரிடப்படுகிறது. இருப்பினும் நமது மாநிலத்தின் முந்திரி உற்பத்தித் திறன் குறைந்த அளவிலேயே உள்ளது. முந்திரியில் விளைச்சல் குறைவதற்கு போதிய பராமரிப்பின்மையும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் முக்கிய காரணம்.குழி தயார் செய்ய வேண்டும்மரக்கன்று நடுவதற்கு முன் நிலத்தில் நவதானியங்களை விதைத்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். நவதானியங்கள் ஒரு மாதம் வளர்ந்தபின் அவற்றை மடக்கி உழ வேண்டும். 3 அடி நீளம், அகலம், ஆழமுள்ள குழிகளை எடுக்க வேண்டும். அதில் இலை தழைகள், கொளிஞ்சி, சணப்பு தாவர இலைகளை கொட்டினால் இரண்டு மாதத்தில் அவை மட்கி விடும். பருவமழை பெய்யும் போது மண்புழு உரம், தொழுஉரம், மணல், செம்மண் கலந்த கலவையை குழியில் இட்டு புதிய கன்றுகளை பாலித்தீன் பையை நீக்கி நட வேண்டும். வேர்ப்பகுதி மண் கண்டத்தை சிதைக்காமல் நடவு செய்வதே நல்லது. மானாவாரியாக இருந்தாலும் செடிகள் காயாமல் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். அவ்வப்போது பஞ்சகாவ்யம், வேப்பம் புண்ணாக்கு கரைசல், மண்புழு உரம் இட வேண்டும்.இரண்டு வித நடவு ஒரு ஏக்கருக்கு அடர்நடவு முறையில் கன்றுக்கு இடையே 25 அடி இடைவெளியும் வழக்கமான 40 அடி இடைவெளி விட்டு நடவு செய்யலாம். விவசாயிகளின் நிலம் உள்ள பகுதியின் மழையளவு, மண்வளம், நீர்வளத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து ஊடுபயிராக ஐந்தாண்டுகளுக்கு காய்கறி, பயறு வகைகளை விதைப்பு செய்யலாம். மரம் வளரும் போது காய்ந்த கிளைகளை கவாத்து செய்து குடை வடிவில் மரத்தை வளர்க்க வேண்டும்.கால்நடை, காட்டு விலங்குகளால் கன்றுகள் சேதமடையாமல் இருக்க அவ்வப்போது ஒலியெழுப்பும் கருவிகளை அமைக்க வேண்டும். ஏற்கனவே முந்திரி சாகுபடி செய்தவர்கள் இடைநடவு முறையில் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம். மண்ணின் தன்மையைப் பொறுத்து குறைந்தது 3 - 4 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். தரிசு நிலமாக இருந்தால் முன் சாகுபடி அவசியம். தானே புயலின் போது விவசாயிகளுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டு நடப்பட்ட முந்திரி கன்றுகளை இந்த நேரத்தில் கவாத்து செய்ய வேண்டும். இடைநடவு செய்வதும் அவசியம். உரிய உரமிட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மானாவாரி விவசாயிகள் வட்டப்பாத்தி முறை, சரிவுக்கு குறுக்கே உழவு செய்தல், மரத்திற்கு அடிப்பகுதியில் காய்ந்த சருகுகளால் நிலப்போர்வை அமைக்கும் உத்திகளை கையாள வேண்டும். சவாலான பூச்சிக்கட்டுப்பாடுமுந்திரியைத் தாக்கும் தண்டு, வேர் துளைப்பான், தேயிலை கொசு, நாவாய்ப்பூச்சி ஆகியவற்றால் 60 சதவீதம் வரை விளைச்சல் இழப்பை ஏற்படுத்துகின்றன. தண்டு மற்றும் வேர்த்துளைப்பான் தாக்குதல் கோடை காலத்தில் தான் அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. இப்புழுக்கள் மரத்தின் உட்பகுதியை தின்று சேதம் ஏற்படுத்துவதால் ஆரம்ப அறிகுறிகள் தென்படும் போதே கட்டுப்படுத்த வேண்டும். முந்திரி மரத்தின் அடிப்பாகம் தரையுடன் சேரும் பகுதிகளில் பட்டை இடுக்குகளுக்குள் பெண் வண்டுகள் முட்டைகளை தனித்தனியாக இடும். 7 நாட்களுக்குள் பொரித்து இளம் புழுக்களாகி அடிமரத்தை குடைந்து தின்னும். புழுக்கள் துளைத்த பகுதிகளிலிருந்து பழுப்பு நிறத்தில் பிசின் கசிந்து கெட்டியாகி இருக்கும். வளரும் புழுக்கள் ஆணி வேருக்குள்ளேயே பல கோணங்களிலும் குடைந்து 6 முதல் 8 மாதங்களில் வேர்ப்பகுதி முழுவதையும் தாக்கிவிடும். இதனால் வேர் பலம் இழந்து தண்ணீர், சத்துகளை மண்ணிலிருந்து உறிஞ்ச முடியாமல் பாதிப்படைகிறது. மரத்திற்கு நீரோட்டம் கிடைக்காததால் இலைகள் மஞ்சளாகி உதிர்ந்து மரம் மொட்டையாகி விடும். தோப்பில் புதர் செடிகள், களைகள் வளராமல் உழவு செய்து சுத்தமாக பராமரிப்பது முதல் வழி. தார், மண்ணெண்ணெய் பூச வேண்டும்வண்டுகள் மரங்களில் முட்டையிடுவதை தடுக்க உருக்கிய தாருடன் மண்ணெண்ணெய் கலந்து பெயின்ட் போல் தயாரித்து மரங்களின் அடிக்கடை பகுதியில் தரையிலிருந்து 1 மீட்டர் உயரத்திற்கு பட்டை இடுக்குகள் மறையும்படி நன்றாக பூசவேண்டும். தார், மண்ணெண்ணெய் கலவையை ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூச வேண்டும். புழுதாக்குதல் உள்ள மரங்களில், மரப்பட்டைக்குள்ளே துளையிடும் புழுக்களை உளியினால் குத்தி வெளியே எடுத்த உடனே வெட்டுப் பகுதியை தார் பூசி அடைக்க வேண்டும். பட்டுப்போன மரத்தை வேரோடு தோண்டி எடுத்து அகற்றவேண்டும். உள்ளிருக்கும் புழு, கூட்டுப்புழு, வண்டுகளையும் சேகரித்து அழிக்கவேண்டும். புழுத்தாக்குதலின் ஆரம்ப அறிகுறியாக பிசின் கசிதலை கண்டவுடன் குளோர்பைரியாஸ் (20 இ.சி.) 0.2 சதவீதத்தை தண்ணீருடன் கலந்து தாக்கப்பட்ட தண்டில் தடவியும், மரத்தின் வேரைச்சுற்றி மண்ணில் ஊற்ற வேண்டும். கவாத்து செய்யும் போது மரக்கிளைகளின் வெட்டு வாய்ப்பகுதியில் 'பைட்டலாள்' பசை பூசவேண்டும். தேயிலை கொசு நாவாய்ப்பூச்சி தாக்குதல்இவை இளந்தளிர், பூங்கொத்து மற்றும் பிஞ்சு உருவாகும் பருவங்களில் தாக்கும். இதன் குஞ்சுகள் சிவப்பு எறும்பு போல இருக்கும். தளிர்களில் சிறு கரும்புள்ளிகள் தோன்றி பிசின் வடியும். பாதிப்பு அதிகமானால் தாக்கப்பட்ட இளம் கிளைகள் முழுவதும் கருகிவிடும். இப்பூச்சியை சூரைப்பூச்சி, கொல்லிப்பூச்சி என்கின்றனர். இது வேம்பு, நாவல், முருங்கை மரங்களையும் தாக்கும். கட்டுப்படுத்தும் முறை இதற்கு மூன்று முறை பூச்சிமருந்து தெளிக்கவேண்டும். தோட்டத்தில் உள்ள வேப்ப மரங்களுக்கும் மருந்து தெளிக்க வேண்டும். தானாக முளைத்து வளரும் வேப்பங்கன்றுகளை அவ்வப்போது அகற்றவேண்டும். டிசம்பர், ஜனவரியில் முந்திரி தளிர்விடும் தருணத்தில் புரபனோபாஸ் (50 இ.சி.) பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மருந்து ஒட்டுவதற்கு ஒரு கிராம் காதி சோப்பு கலக்க வேண்டும். பிப்ரவரியில் பூக்கும் பருவத்தில் தயாமீத்தாக்சம் 25 டபுள்.யு.ஜி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். பூக்கள் கொட்டுவதைத் தடுக்க இரண்டாவது மருந்து தெளிப்பின் போது ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு 2 முதல் 3 கிராம் அளவில் யூரியா பயன்படுத்தலாம். பிப்ரவரி, மார்ச்சில் பிஞ்சுவிடும் பருவத்தில் அசிபேட் 75 எஸ்.பி. நனையும் பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் கரைத்து இலைகள் நனையும்படி தெளிக்க வேண்டும்.போதிய அக்கறையின்மை, சரியான நேரத்தில் கவாத்து செய்யாததால் தான் 20 சதவீத மகசூல் இழப்பும், வருமான குறைவும் ஏற்படுகிறது. தோட்டக்கலைத்துறை மூலமாக பயிருக்கு சொட்டுநீர்ப்பாசனம் செய்ய கிசான் கிரெடிட் முறையில் வங்கிக்கடன் பெறமுடியும். வங்கியில் பதிவு செய்ய வேண்டும். விற்பனை செய்வதற்கு உகந்த வணிகவழிகள் உள்ளதால் விவசாயிகள் நேரடியாக மொத்த கொள்முதல் மையங்களுக்கு எடுத்துச் சென்றால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.விருத்தாச்சலம் முந்திரி ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வி.ஆர்.ஐ., 1, 2, 3 ரகங்கள் தமிழகத்திற்கு ஏற்றவை. தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இலவச முந்திரி மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மேலும் சாகுபடிக்கான செலவையும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகி முன்பதிவு செய்ய வேண்டும்.- இளங்கோவன் கூடுதல் வேளாண்மை இயக்குநர் ஆராய்ச்சி (ஓய்வு), வேளாண் துறை, சென்னை. 98420 07125


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !