உள்ளூர் செய்திகள்

கரை சேர்ந்த பின் மதிப்பு கூட்டினால் லாபம்

தமிழகத்தில் 591 மீன்பிடி கிராமங்களும், 362 மீன் இறங்கு தளங்களும், 6 லட்சத்து 80ஆயிரம் கடல் மீனவர்கள் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரம் மீனவர்கள் நேரடி மீன்பிடிப்பு தொழில் ஈடுபட்டுள்ளனர்.மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக கடற்கரையானது மீன்வளம் செறிந்தது. சாளை மீன்கள், காரை, பாறை மீன்கள், பெர்சஸ் மீன் வகைகளான கலவா, நவரை, சங்கரா, லோமியோ மற்றும் வௌ மீன்கள், பண்ணா கத்தாளை, அயிலைமீன்கள், சுறா, திருக்கை, இறால்கள், நண்டுகள் மற்றும் வெண் சங்குகள் அதிகளவில் தமிழக கடற்பகுதியில் கிடைக்கின்றன. இந்தியாவில் 58 சதவீதத்திற்கு மேற்பட்டோர் மீன் சாப்பிடுகின்றனர். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், ஒடிசா, கோவா மற்றும் கேரளாவில் இந்த எண்ணிக்கை 90 சதவீதத்திற்கு மேல் உள்ளது. மீனில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, தாதுச்சத்து,உயிர்ச்சத்து அதிகளவிலும் மாவுச்சத்து மிக குறைந்த அளவிலும் காணப்படுகிறது. மதிப்பு கூட்டுதல் எளிதேசாதாரணமாக விற்கப்படும் ஒரு பொருளின் தரம், சுவை, ஊட்டச்சத்தை நுகர்வோர் விரும்பும் வகையில் மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தலாம். மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்களில் இதை எளிதாக செய்ய முடியும்.மீன் ஊறுகாய், இறால், நண்டு ஊறுகாய், குழம்பு, கருவாடு, மீன் மசாலா, மீன் கேக், பிஸ்கெட், கட்லெட், மீன் ரோல்ஸ், மீன் கபாப், பஜ்ஜி, பக்கோடா, பப்ஸ், மீன் பர்கர், சாண்ட்விச், மீன் குரே, நுாடுல்ஸ், பாஸ்தா, மீன் வடகம், மீன், நண்டு சூப் பவுடர், தொக்கு ஆகியவற்றின் தயாரிப்பு தொழில்நுட்பத்தை சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் கற்றுத் தருகிறது. இங்கு பயிற்சி பெற்ற பலரும் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். மதிப்பூட்டிய மீன் பொருட்கள் நுகர்வோரிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இலங்கை, சீனா, பர்மா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுள்ளது. மதிப்பு கூட்டலுக்கு ஏற்ற மீனினங்கள்விலை குறைந்த சாளை மீன், அயிலை, சங்கரா, லோமியோ, பண்ணா, கத்தாளை, செந்நகரை மீன் வகைகள் மதிப்பு கூட்டலுக்கு ஏற்றவை. நடுத்தர மற்றும் சற்று பெரிய கூனி இறால் வகைகள் அதிகளவில் கிடைக்கும் போது மிகக்குறைந்த விலையில் விற்க நேரிடும். அவ்வாறு செய்யாமல் மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை மதிப்பூட்டிய மீன் பொருட்களாக தயாரித்து அதிக லாபம் பெறலாம். மீன்கள் அதிகமாக பிடிக்கப்படும் காலங்களில் தேவை குறைவாக இருப்பதாலும் போதிய குளிர்பதன வசதி இல்லாததாலும் மீன்களை மிகக்குறைந்த விலைக்கே விற்க வேண்டியுள்ளது. இதனால் மீனவர்களுக்கு சாதகமான விலை கிடைப்பது கடினம். உபரியாக கிடைக்கும் குறைந்த விலை மீன்களை மதிப்பு கூட்டி லாபகரமாக விற்கலாம். மீனவ மக்கள், மீன் பண்ணையாளர்கள், மகளிர், தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.- கோபாலக்கண்ணன், தலைவர்மதிவாணன், ஹினோ பர்னாண்டோ,தொழில்நுட்ப வல்லுநர்கள், வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல்நாகப்பட்டினம்இமெயில்: kvksikkal@tnfu.ac.inபோன்: 04365 - 299 806


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !