உள்ளூர் செய்திகள்

நெற்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிகள்

நெற்பயிர் தற்போது அனைத்து பருவங்களிலும் உள்ளது. முதல் போகம் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை பருவத்திலும் ஒருபோக சாகுபடி நெல் நாற்றாங்கால் நடவுப்பருவத்திலும் உள்ளன. தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலையில் நெற்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை தடுத்து நெல் மகசூல் பெற விவசாயிகள் முயற்சிக்க வேண்டும்.இலை சுருட்டுப்புழு: இப்புழுக்கள் இலைகளின் பச்சையத்தை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும். இலைகள் நீள்வாக்கில் சுருண்டு புழுக்கள் அதனுள் இருக்கும். இதனை தடுத்திட வரப்புகளை சீராக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வேப்பங்கொட்டை சாறு (5 சதவீதம்) அல்லது வேப்பெண்ணெய் (3 சதவீதம்) ஆகியவற்றை தெளிக்க வேண்டும். பொருளாதார சேத நிலையை பொறுத்து ஒரு ஏக்கருக்கு 400 மில்லி 'மோனோ குரோட்டோபாஸ்' அல்லது 'டைக்குலோரோபாஸ்' 100 மில்லி தெளிக்கலாம்.கதிர் நாவாய்ப்பூச்சி: இப்பூச்சிகள் பால் பருவத்திலிருக்கும் நெல் மணிகளிகளிலிருந்து சாறு உறிஞ்சும். தீவிர பூச்சி தாக்குதலின் போது முழு தானியம் கதிரும் தாக்கப்பட்டு நெல் மணிகள் முதிர்ச்சியடையாமல் போய் விடும். இதைத்தடுக்க வசம்பு பொடியை (அக்கோரஸ் காலமஸ்), ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் 90 கிலோ சாம்பல் கலந்து தூவலாம். பொருளாதார சேதநிலையில் ஏக்கருக்கு 'மாலத்தியான்' (50 இசி) 200 மில்லி அல்லது 'பென்தியான்' (100 இசி) 200 மில்லி என்ற அளவில் காலை 9 மணிக்கு முன்னர் அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.புகையான்: புகையான் தாக்கப்பட்ட பயிர்கள் தீய்ந்து மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக காணப்படும். முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாக காணப்படும். பயிர்களும் சாய்ந்து விடும். நீர்மட்டத்திற்கு மேலிருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். புகையான் தாக்குதலைத் தவிர்த்திட தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலை தவிர்த்தல் வேண்டும். வெள்ளைத்தன்மையுடைய விளக்கு பொறிகளை 1 முதல் 2 மீட்டர் உயரத்தில் பொருத்தி பூச்சிகளின் தொகையை கண்காணிக்க வேண்டும். வயலில் உள்ள தண்ணீரினை வடித்த பின், ஏக்கருக்கு 'இமிடாகுளோபிரிட்' 50 மில்லி அல்லது 'பாஸ்லோன்' 600 மில்லி என்ற அளவில் மருந்துகளை கைத்தெளிப்பானைக் கொண்டு தெளிக்க வேண்டும்.குலைநோய்: குலைநோய் பூசணத் தாக்குதலால் ஏற்படுகிறது. பயிரின் அனைத்து பகுதிகளும் தாக்க வாய்ப்புள்ளது. தீவிர தாக்குதலின் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும். இந்நோய் தாக்குதலை வரும்முன் தவிர்த்தல் நல்லது. 'குடோமோனாஸ்' துகள் கலவையினை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அளவில் 400 மில்லி தண்ணீரில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நாற்றாங்காலில் இரண்டரை கிலோ சூடோமோனாஸ் பொடியை நன்கு கலக்க வேண்டும். சூடோமோனாஸ் கலந்த நீரில் நாற்றுக்களை 30 நிமிடங்கள் ஊறவைத்து நடவு செய்ய வேண்டும். நட வுக்கு 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளிகளில் 0.5 சதவீதம் சூடோமோனாஸ் கரைசலை மூன்று முறை தெளிக்க வேண்டும். ஏக்கர் ஒன்றிற்கு 'எடிபன்பாஸ்' 200 மில்லி அல்லது 'மேன்கோசெப்' 400 கிராம் அல்லது 'கிட்டாச்சின்' 100 கிராம் அல்லது 'டிரைசைக்ளோசெல்' 150 கிராம் தெளிக்கலாம். பூச்சி, நோய் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைககளை மேற்கொள்ள வேண்டும். விவரங்களுக்கு மதுரை மெற்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.- கட்டுரையாளர்: உதவி இயக்குனர் வடிவேல்குமார்,மேற்கு வட்டார வேளாண் துறை, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !