உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருவாயை அதிகரிக்க பெங்களூரு மாநகராட்சி ஆர்வம் புதிதாக 7 லட்சம் சொத்துகளுக்கு வரி விதிக்க திட்டம்

வருவாயை அதிகரிக்க பெங்களூரு மாநகராட்சி ஆர்வம் புதிதாக 7 லட்சம் சொத்துகளுக்கு வரி விதிக்க திட்டம்

பெங்களூரு: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பெங்களூரு மாநகராட்சி, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போன்று, இப்போது வருவாயை அதிகரிப்பதில் ஆர்வம் காண்பிக்கிறது. புதிதாக ஐந்து முதல் ஏழு லட்சம் சொத்துகளுக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.பெங்களூரு 'சிலிகான் சிட்டி', 'ஐ.டி., சிட்டி' என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. ஆனால் மாநகராட்சி பொருளாதார நெருக்கடியால் தள்ளாடுகிறது.வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் பணம் இல்லை. சாலை மேம்பாட்டுப் பணிகள், ஒயிட் டாப்பிங் பணிகள் உட்பட பல்வேறு பணிகளை நடத்திய ஒப்பந்ததாரர்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் 'பில்' பாக்கி வைத்துள்ளது.

இழப்பு

தற்போது வருவாயை அதிகரிப்பதில், ஆர்வம் காண்பிக்கிறது. பெங்களூரில் மொத்தம் 20 லட்சம் சொத்துகள் வரி எல்லைக்கு உட்பட்டுள்ளன. ஐந்து முதல் ஏழு லட்சம் சொத்துகளுக்கு இதுவரை வரி விதிக்கவில்லை. இதனால் மாநகராட்சிக்கு நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய சொத்துகளை அடையாளம் கண்டு, வரி விதிக்க மாநகராட்சி சிறப்பு திட்டம் வகுத்துள்ளது.

விரைவில் அமல்

இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வரி விதிக்கப்படாத சொத்துகளுக்கு வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுபோன்ற சொத்துகளின் உரிமையாளர்களுக்கு, சொத்துகளை வரி எல்லையில் சேர்க்க, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும். அலைய வேண்டியது இல்லை. இவர்களாகவே முன் வந்து சொத்துகளை பற்றி தகவல் கூறி வரி எல்லையில் சேர்க்க வேண்டும்.இப்படி செய்தால், தாமதமாக வரி செலுத்துவோரிடம் வசூலிக்கப்படும் வட்டி மற்றும் அபராதத்தில் இருந்து தப்பிக்கலாம். சொத்துகளை வாங்கவோ, விற்கவோ எந்த இடையூறும் இருக்காது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

சிறப்பு திட்டம்

மனுத் தாக்கல் செய்தோரின் சொத்துகளை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வர். கட்ட வேண்டிய சொத்து வரியை கணக்கிட்டு, மூன்று மாதங்களில் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிப்பர். இதுவரை சொத்து உரிமையாளர்களிடம் தற்காலிகமாக வரி வசூலிக்கப்படும். சொத்து விபரங்கள் தெரிந்த பின், தற்காலிக வரி சரியாக இருந்தால், அதையே கட்டலாம். ஒருவேளை குறைவாக இருந்தால், நோட்டீஸ் அளித்து வசூலிக்கப்படும்.நடப்பாண்டு மார்ச் மாதம், துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், ஆலோசனை நடந்தபோது, சொத்துகளை வரி எல்லைக்குள் கொண்டு வர, சிறப்பு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் நடந்ததால் தாமதமானது. விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும்.தற்போது பெங்களூரு மாநகராட்சிக்கு 20 லட்சம் சொத்துகளில் இருந்து, ஆண்டுதோறும் 4,000 கோடி ரூபாய் வரி வசூலாகிறது. வரி எல்லைக்குள் வராத சொத்துகளை, வரி எல்லைக்குள் சேர்த்தால் கூடுதலாக 1,000 முதல் 1,500 கோடி ரூபாய் வசூலாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை