கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை
பெங்களூரு: கர்நாடக கடலோர மாவட்டங்களில், வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.கடலோர மாவட்டங்களான உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் அறிகுறிகள் தென்படுகின்றன என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளன. வெப்ப அலையில் இருந்து தப்ப, மக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.வழிமுறைகள்: மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெயிலில் செல்வதை தவிருங்கள். தாகம் இல்லை என்றாலும், அவ்வப்போது தண்ணீர் குடியுங்கள். கூடுமானவரை வெளிர்நிற உடைகள், பருத்தி உடைகள் அணிவது நல்லது. வெயிலில் செல்ல வேண்டியிருந்தால், கண்ணாடி, தொப்பி அணிந்து செல்லுங்கள். குடை கொண்டு செல்லலாம். வெயில் அதிகமாக இருக்கும் போது, உடலை வருத்தும்படி பணிகளை செய்வதை தவிருங்கள். வெளியே பணியாற்ற வேண்டி இருந்தால், தொப்பி அல்லது குடை பயன்படுத்துங்கள். தலை, கழுத்து, முகம், கை, கால்கள் மீது ஈரத்துணி வைத்திருங்கள். வெப்பத்தை தாங்க முடியாமல், உடல்நிலை பாதித்திருப்பதாக தோன்றினால், உடனடியாக டாக்டரை அணுகுங்கள். உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க, ஓ.ஆர்.எஸ்., வீட்டில் தயாரித்த லஸ்சி, எலுமிச்சை ரசம், மோர் அருந்துங்கள். வளர்ப்பு பிராணிகளை நிழலில் கட்டி போடுங்கள். இவைகளுக்கு தேவையான தண்ணீர் வையுங்கள்.