சிவகுமார் விருந்து குறித்து மேல்சபையில் சுவாரசியம்
பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு துணை முதல்வர் சிவகுமார் விருந்து அளித்தது குறித்து, மேல்சபையில் சுவாரசியமான விவாதம் நடந்தது.மேல்சபை கேள்வி நேரத்தில், குப்பை பிரச்னை குறித்த கேள்விகளுக்கு, துணை முதல்வர் சிவகுமார் பதில் அளித்துக் கொண்டிருந்தார். “குப்பை பிரச்னை தொடர்பாக, சில தொழில்நுட்ப அம்சங்களை கண்டறிய வேண்டும். வரும் திங்கட்கிழமை விரிவாக பதில் அளிப்பேன்,” என்றார் அவர்.அப்போது இடைமறித்த பா.ஜ., உறுப்பினர் ரவி, “உங்கள் முகத்தில் உற்சாகம் தென்படுகிறது. மிகவும் பிரகாசமாக ஜொலிக்கிறது.ஏதாவது நல்ல செய்தி, சுப சகுனம் கிடைத்ததா? அந்த நல்ல செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்,” என நகைச்சுவையாக கூறினார்.இதை ஆமோதித்த, பா.ஜ.,, உறுப்பினர் ரவிகுமார், “நீங்கள் அனைவருக்கும் டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளீர்கள்.நற்செய்தி ஏதாவது உள்ளதா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சிவகுமார், “அப்படி ஒன்றும் இல்லை. நீங்கள் வருவதாக இருந்தால், உங்களையும் டின்னருக்கு அழைத்திருப்பேன். அனைவரையும் சந்தோஷப்படுத்தினால், நானும் சந்தோஷமாக இருப்பேன்.அனைவரையும் சந்தோஷப்படுத்த நான் முயற்சிக்கிறேன்,” என்றார்.