உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுபான்மையினருக்கு வாரி வழங்கிய சித்தராமையா

சிறுபான்மையினருக்கு வாரி வழங்கிய சித்தராமையா

பெங்களூரு: எதிர்பார்த்தது போலவே சிறுபான்மை சமூகத்தினருக்கு, பட்ஜெட்டில் முதல்வர் தாராளம் காண்பித்து உள்ளார். ''பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை சமூகத்தினர் இடையே எளிய திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஜோடிக்கும் திருமண செலவாக தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்,'' என அறிவித்துள்ளார்.சிறுபான்மையினர் நலனுக்கான திட்டங்கள் குறித்து, முதல்வர் சித்தராமையாவின் பட்ஜெட் உரை:  மாநிலத்தில், 250 மவுலானா ஆசாத் ஆங்கில வழி பள்ளிகளில், துவக்க கல்வி முதல் பி.யு., வரை படிப்படியாக துவங்கப்படும். இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு. முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் விடுவிப்பு. கர்நாடக பள்ளி கல்வி துறை ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கல்வி துறையால் நடத்தப்படும் 100 உருது வழி பள்ளிகளை தேர்ந்தெடுத்து, கர்நாடக பப்ளிக் பள்ளிகளுக்கு இணையான அடிப்படை வசதிகள் வழங்கப்படும். இதற்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு. முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் விடுவிக்கப்படும். சிறுபான்மையினர் வசிக்கும் காலனிகளை மேம்படுத்த, முதல்வரின் சிறுபான்மையினர் காலனி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1,000 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பணிகள் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும். சிறுபான்மை மேம்பாட்டு கழகத்தின் மூலம், புதிய தொழில்களை துவங்க, சிறுபான்மை சமூக இளைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவர். வக்பு சொத்துகளை புனரமைப்பு செய்யவும், முஸ்லிம் சமூகத்தினர் பயன்படுத்தும் மயானங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பட்டப்படிப்பு படிக்க முடியாத சிறுபான்மை சமூக மாணவர்களுக்காக ஹஜ் பவனில், கர்நாடக மாநில திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சார்பில் வகுப்புகள் நடத்தப்படும். சிறுபான்மையினர் நல துறையின் கீழ் செயல்படும் 169 குடியிருப்பு பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் 25,000 மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை சமூகத்தினர் இடையே எளிய திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஜோடிக்கும் திருமண செலவாக தலா 50,000 ரூபாய் வழங்கப்படும். பெங்களூரில் உள்ள ஹஜ் பவனில் கூடுதல் கட்டடம் கட்டப்படும். இந்த கட்டடம் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்கள், அவர்களை வழி அனுப்பி வைக்க வரும் உறவினர்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும். சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண்களின் உயர்கல்வியை ஆதரிக்கும் வகையில், வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலி இடங்களில் இந்த நிதி ஆண்டில் 16 பெண்கள் கல்லுாரி துவங்கப்படும். குருத்வாராக்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பெங்களூரில் புத்த மத ஆய்வு அகாடமி துவங்கப்படும். பெங்களூரில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மகாபோதி கல்வி மையத்தில் உள்ள நுாலகம் டிஜிட்டல் மயமாக்கப்படும். இதற்கு 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஜெயின், புத்த, சீக்கிய சமூகங்களின் வளர்ச்சிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. கிறிஸ்துவ சமூக வளர்ச்சிக்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஜெயின் கோவில் அர்ச்சகர், சீக்கிய தலைமை கிராண்டிஸ், மசூதியின் இமாம்களுக்கு மாதம் 6,000 ரூபாய் கவுரவ தொகை. சன்னிதி வளர்ச்சி ஆணையம் சார்பில், கலபுரகி சித்தாபுராவில் புத்த மையம் அமைக்கப்படும். சிறுபான்மை சமூகத்தினர் கலாசார மற்றும் சமூக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க மாநிலம் முழுதும் கிராம, தாலுகா அளவில் 50 லட்சம் ரூபாய் செலவிலும்; மாவட்ட தலைநகர், மாநகராட்சி பகுதிகளில் 1 கோடி செலவிலும் பன்நோக்கு அரங்குகள் கட்டப்படும். சிறுபான்மை சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஐ.டி.ஐ., கல்லுாரி அமைக்க நடவடிக்கை. வெளிநாடுகளை சேர்ந்த சிறுபான்மையினர் சமூக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவி தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவியருக்காக, உல்லாலில் விடுதி வசதியுடன் கூடிய பள்ளி, கல்லுாரி துவங்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை