சிவராத்திரிக்கு மறுநாள் விடுமுறை விடப்படுமா?
பெங்களூரு: சிவராத்திரியை முன்னிட்டு, இரவு உறங்காமல் விழித்திருப்பதால், மறுநாள் ஹிந்து ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும்படி, ஹிந்து அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ரம்ஜான் தொழுகை நடத்த வசதியாக, முஸ்லிம் ஊழியர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் முன்னதாகவே, அலுவலகத்தில் இருந்து வீடு செல்ல அனுமதி அளிக்கும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு முஸ்லிம் தலைவர்கள் சிலர் கடிதம் எழுதியிருந்தனர்.இதுபோன்ற கோரிக்கையை, ஹிந்து அமைப்பினரும், முதல்வரிடம் வைத்துள்ளனர். 'சிவராத்திரியை முன்னிட்டு, பக்தர்கள் கண் விழிப்பர். இரவு முழுதும் பஜனை, பக்தி பாடல்கள் பாடி, சிவனை பூஜித்து வழிபடுவதில் ஈடுபடுவர்.'இதனால் மறுநாள் அலுவலகம் சென்று பணியாற்றுவது கஷ்டமாக இருக்கும். எனவே, சிவராத்திரிக்கு மறுநாள் ஹிந்து ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.'இது குறித்து, முதல்வர் உத்தரவு வெளியிட வேண்டும். நடப்பாண்டு மட்டுமின்றி, ஆண்டுதோறும் இதுபோன்று விடுமுறை அளிக்க வேண்டும்' என்றும், ஹிந்து அமைப்பினர் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.