சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், நாளை மறுநாள் 1,008 சங்காபிஷேகம் நடக்கிறது. மஹாலட்சுமியும் அவரது அம்சமாக தோன்றிய மணி சங்கை திருப்பதி பெருமாளும், துவரி சங்கை ரங்கநாதரும், பாருத சங்கை அனந்த பத்மநாப சுவாமியும், பார் சங்கை சுதர்சன ஆழ்வாரும், துயிலா சங்கை சவுரிராஜ பெருமாளும், வெண் சங்கை கலிய பெருமாளும், பூமா சங்கை ஸ்ரீ நாராயண மூர்த்தியும் எடுத்துக் கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. கோவில்களில் வீற்றிருக்கும் கடவுள்கள் கையில் இந்த சங்குகள் இருக்கும் என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஒன்பதாவதாக தோன்றிய பாபஹர என்ற வலம்புரி சங்கை, அபிஷேக பிரியரான சிவன் தனக்கு அபிஷேகம் செய்ய எடுத்துக் கொண்டாராம். இதனால் சங்காபிஷேம் சிறப்பு பெற்றது. வலம்புரி சங்கு எனும் கடல்வாழ் உயிரினத்தின் கூட்டை, வீட்டில் வைத்து வழிபட்டால் மஹாலட்சுமி நம்மை தேடி வருவார் என்றும் வேதங்கள் சொல்கின்றன. வீட்டில் ஏதாவது வாஸ்து குறைபாடு ஏற்பட்டால், நத்தை கூட்டின் மீது துளசி, மஞ்சள் நீர் தெளித்து வழிபட்டால் குறைகள் நீங்குவதாகவும் ஐதீகம் உள்ளது. முற்காலத்தில் வீடு கட்டும்போது வலம்புரி சங்கை, வீட்டின் நிலை வாசல் படியில் வைத்ததால் நிம்மதியாக வாழ்ந்ததாகவும் முன்னோர்கள் கூறுகின்றனர். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தெடுத்தபோது, பதினாறு வகை தெய்வீக பொருட்கள் வெளிவந்தன. அதில் இருந்தே சங்கு கிடைத்ததாகவும் புராண கதைகள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க சங்குகளில் புனித நீர் ஊற்றி, சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த ஆண்டுக்கான 1,008 சங்காபிஷேகம், கார்த்திகை இரண்டாவது சோமவாரமான வரும் 24ல் பெங்களூரு சிவாஜிநகர் திம்மையா சாலையில் உள்ள காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை மாலை 4:15 மணிக்கு பூஜை, கணபதி பூஜை, மஹா சங்கல்பம், சுவஸ்தி புண்யாகவச்சனா, 1,008 சங்கு பூஜை, மெயின் கலச பூஜை, சிவ மூல மந்திர ஹோமம், லகு பூர்ணாஹுதி, அஷ்ட வந்தன சேவா, தீர்த்த பிரசாத விநியோகம் நடக்கிறது. நாளை மறு நாள் காலை 7:15 மணிக்கு கணபதி பூஜை, இரண்டாவது கால சங்கு பூஜை, சிறப்பு ஹோமம், மஹா பூர்ணாஹுதிக்கு பின், 9:00 மணிக்கு சங்கு அபிஷேகம் துவங்குகிறது. பிரார்த்தனை கலச அபிஷேகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கோவில்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வதை தரிசனம் செய்தால், பாவங்கள் நீக்கி, அனைத்து வளங்களும் பெற்று வாழ்வர் என்பது ஐதீகம்.