உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வாலிபரை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்; 17 வயது சிறுமி உட்பட 11 பேர் கைது

வாலிபரை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்; 17 வயது சிறுமி உட்பட 11 பேர் கைது

சோழதேவனஹள்ளி : முன்னாள் காதலிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய வாலிபரை காரில் கடத்திச் சென்று, நிர்வாணமாக்கி தாக்கிய, 17 வயது சிறுமி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு, பாகல்குண்டேயை சேர்ந்தவர் குஷால், 20. இவரும், 17 வயது சிறுமியும் பள்ளி படிக்கும் போதே காதலித்தனர். குஷாலின் காதலி தற்போது தனியார் கல்லுாரியில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.இரண்டு மாதங்களுக்கு முன்பு, குஷாலுக்கும், அவரது காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், 'பிரேக் அப்' செய்து கொண்டனர். அதன்பின், அந்த சிறுமி, இன்னொரு வாலிபரை காதலிக்க ஆரம்பித்தார்.

கடத்தல்

ஆத்திரம் அடைந்த குஷால், சில தினங்களாக முன்னாள் காதலிக்கு, 'வாட்ஸாப்'பில் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி உள்ளார். 'உன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்' என, குஷால் மிரட்டி உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி, தன் புதிய காதலன் ஷஷாங்கிடம் கூறி உள்ளார். தன்னை மிரட்டும் முன்னாள் காதலன் குஷாலுக்கு, தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் சிறுமி கூறி இருக்கிறார்.இதனால் கடந்த 5ம் தேதி பாகல்குண்டே ஏ.ஜி.பி., லே - அவுட்டில் இருந்து குஷாலை, முன்னாள் காதலி, ஷஷாங்க், அவரது நண்பர்கள் சிலர் காரில் கடத்தினர். சோழதேவனஹள்ளியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குஷாலை நிர்வாணமாக்கி, அவரது மர்ம உறுப்பிலும் தாக்கி உள்ளனர்.

பாதுகாப்பு மையம்

'நடிகர் தர்ஷன் ரசிகர் ரேணுகாசாமியை போன்று உன்னையும் கொன்று விடுவோம்' என மிரட்டி உள்ளனர். இதை வீடியோ எடுத்துள்ளனர். 'இனி ஏதாவது பிரச்னை செய்தால், சமூக வலைதளங்களில் உன் நிர்வாண வீடியோவை வெளியிடுவோம்' என எச்சரித்து, குஷாலை விடுவித்துள்ளனர்.இந்த தாக்குதல் குறித்து குஷால் பெற்றோர் அளித்த புகாரில், சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குஷாலின் முன்னாள் காதலி, ஷஷாங்க், அவரது நண்பர்கள் சல்மான், யஷ்வந்த், தேஜஸ், ராகுல், ஹேமந்த் உட்பட 11 பேரை நேற்று கைது செய்தனர். சிறுமிக்கு 17 வயது என்பதால், பெண்கள் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழி பவித்ராவுக்கு, ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால், சித்ரதுர்காவின் ரேணுகாசாமியை கடத்தி வந்து நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கி, தர்ஷன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடந்த ஆண்டு கொலை செய்தார். இந்த தாக்குதலும் கிட்டத்தட்ட அதே பாணியில் தான் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி