உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாட்டு வாலில் தீ வைத்த 16 வயது சிறுவன் கைது

மாட்டு வாலில் தீ வைத்த 16 வயது சிறுவன் கைது

சிக்கமகளூரு: மாட்டின் வாலில் தீ வைத்த, 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். சிக்கமகளூரு மாவட்டம், விஜயபுரா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், கடந்த வெள்ளிக்கிழமை சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மாட்டின் வாலில் வாசனை திரவியத்தை அடித்தான். பின், தன்னிடம் இருந்த லைட்டரை கொண்டு, மாட்டின் வாலுக்கு தீ வைத்தான். இதனால், மாடு தலைதெறிக்க ஓடியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பசவனஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, இந்த விஷயத்தை அறிந்த ஹிந்து அமைப்பினர் சிறுவனை தாக்கினர். பின், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பசுவை துன்புறுத்தியதற்காக சிறுவன் மீது போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். சிறுவனை காவலில் எடுத்தனர். இதனிடையே சிறுவனை ஹிந்து அமைப்பினர் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவியது. இதையடுத்து, சிறுவனின் தாய் ஷபானா பானு, தன் மகனை ஹிந்து அமைப்பினர் கொலை செய்ய முயற்சித்ததாக புகார் அளித்தார். புகாரில், சிக்கமகளூரு பா.ஜ., இளைஞர் அணி தலைவர் சந்தோஷ், பஜ்ரங் தள் ஹாசன் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஷாம் கவுடாவின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அதே போல, விஜயபுரா பகுதியில் பசுக்கள் தொடர்ந்து சித்ரவதை செய்யப்படுகின்றன. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, ஹிந்து அமைப்பினரும் புகார் அளித்தனர். இரு தரப்பினர் அளித்த புகாரை அடுத்து, பசவனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !