உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நான்காவது மாடியிலிருந்து விழுந்து 2 வயது ஆண் குழந்தை படுகாயம்

 நான்காவது மாடியிலிருந்து விழுந்து 2 வயது ஆண் குழந்தை படுகாயம்

மடிவாளா: நான்காவது மாடியில் இருந்து, தவறி விழுந்த, 2 வயது ஆண் குழந்தை பலத்த காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறது. இந்த சம்பவத்துக்கு, பெற்றோரின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெங்களூரு மடிவாளாவின் சிக்க ஆடுகோடி அருகில், 2 வயது ஆண் குழந்தை, தன் பெற்றோருடன் வசிக்கிறது. இவர்கள் நான்காம் மாடியில் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் மாடியில் இருந்து, இருக்கை கீழே விழுந்தது. அப்போதே அப்பகுதியினர், குழந்தை மாடியில் விளையாடும் போது, அங்கேயே இருந்து கண்காணிக்கும்படி பெற்றோரை எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கையை பெற்றோர் பொருட்படுத்தவில்லை. நேற்று முன்தினம் காலையில், குழந்தை வழக்கம் போல, மாடியில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தையின் தாய், மொபைல் போனில் சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டிருந்தார். பால்கனியில் இருந்த இரும்பு கிரில் மீது ஏறி, குழந்தை விளையாடும் போது, மாடியில் இருந்து விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், பலத்த காயமடைந்த குழந்தையை, ஆட்டோவில் அழைத்து சென்று, கோரமங்களாவின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாடியில் இருந்து குழந்தை விழும் காட்சி, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவியது. பலரும் குழந்தையின் பெற்றோரை கண்டித்தனர். 'கிரில் மீது குழந்தை ஏறும் போதே, தாய் கவனித்திருந்தால் அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம். குழந்தை பெறுவது முக்கியமல்ல. அதை எப்படி பாதுகாப்பாக பராமரிக்கிறோம் என்பதே முக்கியம். குழந்தையை அலட்சியமாக விளையாட விடுவது சரியில்லை' என, பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பாக, மடிவாளா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !