முதிய தம்பதி கொலையில் 3 பேருக்கு ஆயுள் சிறை
தாவணகெரே: முதிய தம்பதியை கொன்று, நகை, பணத்தை கொள்ளை அடித்த வழக்கில், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தாவணகெரே நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.தாவணகெரே தாலுகா எலபெதுார் கிராமத்தில் வசித்தவர் குருசித்தய்யா, 80. வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்தார். இவரது மனைவி சரோஜம்மா, 75. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ரத்த வெள்ளத்தில் தம்பதி, தங்கள் வீட்டில் இறந்து கிடந்தனர்.தம்பதியை கொலை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த குமார், 38, பரசுராம், 33, மரிசாமி, 30, ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.குருசித்தய்யாவிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் கடனாக, குமார் வாங்கினார். அதில் 2 லட்சம் ரூபாய் திரும்ப கொடுத்தார். 1 லட்சம் ரூபாய் கொடுக்காமல் இழுத்தடித்தார். இதனால் குமாருக்கும், குருசித்தய்யாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.கோபம் அடைந்த குமார், குருசித்தய்யாவையும், அவரது மனைவி சரோஜம்மாவும் கொன்று வீட்டில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க நினைத்தார். இதற்காக தன் நண்பர்கள் பரசுராம், மரிசாமியுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.மூன்று பேரும் சேர்ந்து தம்பதியை கத்தியால் குத்திக் கொன்று, 7 லட்சம் ரூபாய் ரொக்கம், தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.இந்த வழக்கு தொடர்பாக தாவணகெரே முதலாவது கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கின் விசாரணை முடிவில், நீதிபதி அன்னய்யனவர் நேற்று தீர்ப்பு கூறினார்.குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா 35,000 ரூபாய் அபராதம் விதித்தார்.