உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  செம்மர கட்டைகள் கடத்தல் சிறுவன் உட்பட 4 பேர் கைது

 செம்மர கட்டைகள் கடத்தல் சிறுவன் உட்பட 4 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரில் செம்மரக்கட்டைகள் கடத்திய இருவேறு சம்பவங்களில், சிறுவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆந்திராவின் கடப்பாவில் இருந்து தமிழகத்தின் ஓசூருக்கு பெங்களூரு வழியாக செம்மரக்கட்டைகள் கட த்தப்படுவதாக, ஹுலிமாவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி ஹெப்பால் - கே.ஆர்.புரம் வெளிவட்ட சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த தமிழக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரின் இருக்கைக்கு அடியில் மறைத்து செம்மரக்கட்டைகள் கடத்தியது தெரிந்தது. காரை ஓட்டி வந்த தனிசந்திராவின் அகமது பாஷா, 40 மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான 1,143 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதை அகமது பாஷா ஒப்பு கொண்டார். இதுபோல ஆந்திராவின் மதனப்பள்ளியில் இருந்து பெங்களூருக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற, பி.பி.ஏ., பட்டதாரிகளான ராஜசேகர், 28, வரபிரசாத், 29 ஆகியோரை, ஆர்.டி.நகர் போலீசார் கைது செய்தனர். பட்டப்படிப்பு படித்திருந்தாலும் வேலை கிடைக்காததால், பணத்திற்காக செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டனர். இவர்களிடம் இருந்து 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான 746 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரு வழக்கிலும், 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான 1,889 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ