பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகும் பெங்களூரின் 5 மாநகராட்சிகள்
பெங்களூரு : 'கிரேட்டர் பெங்களூரு' ஆணையத்தில் உள்ள ஐந்து மாநகராட்சிகளும் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகி வருகின்றன. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, புதிய சட்டத்தின் கீழ், பெங்களூரு மாநகராட்சியை ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையமாக மாறியுள்ளது. ஆணையத்தின் கீழ் பெங்களூரு மேற்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு கிழக்கு, பெங்களூரு மத்திய என, ஐந்து மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2ல் ஜி.பி.ஏ., அதிகாரப்பூர்வமாக உதயமானது. தற்போது பட்ஜெட் தாக்கல் செய்ய, ஐந்து மாநகராட்சிகளின் அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர். ஐந்து மாநகராட்சிகளின் அதிகாரிகள், ஊழியர்களின் ஊதியம், நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கான செலவு, மேம்பாட்டுத் திட்டங்கள், பூங்கா, மைதானம், பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனை, சாலைகள், இந்திரா உணவகங்கள் நிர்வகிப்பு செலவுக்கு பட்ஜெட் தயாரிக்கின்றனர். பட்ஜெட் தயாரித்து ஜி.பி.ஏ., நிர்வாக அதிகாரி மற்றும் அரசிடம் அனுமதி பெற்ற பின், தாக்கல் செய்து செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இம்மாத இறுதிக்குள் அனைத்து மாநகராட்சி கமிஷனர்களும், பட்ஜெட் தாக்கல் செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, உயர் அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு மார்ச் 29ல், பெங்களூரு மாநகராட்சி 20,000 கோடி ரூபாய் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தது. ஆகஸ்ட் இறுதி வரை பட்ஜெட் தொகையில் பெருமளவு செலவிடப்பட்டது. பட்ஜெட் திட்டங்கள் குறித்து, அந்தந்த மாநகராட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். வருவாய்க்கு தகுந்தபடி புதிய பணிகளை மேற்கொள்ளும் சுதந்திரம், மாநகராட்சி கமிஷனர்களுக்கு உள்ளது. நடப்பு நிதியாண்டில், 6,500 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் இறுதி வரை 3,500 கோடி ரூபாய் வரி வசூலானது. நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களில், எந்தெந்த மாநகராட்சிகளுக்கு எவ்வளவு சொத்து வரி வசூலாக வேண்டும் என்பது குறித்து, அந்தந்த மாநகராட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதன்படி தனித்தனி பட்ஜெட்டை கமிஷனர்கள், அதிகாரிகள் தாக்கல் செய்வர். பெங்களூரு மாநகராட்சியாக இருந்தபோது, பணிகள் நடத்திய ஒப்பந்ததாரர்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி உள்ளது. எந்த மாநகராட்சி எல்லையில் பணிகள் நடந்தனவோ, அந்த மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு, பில் தொகை வழங்க வேண்டும். பட்ஜெட் தயாரிக்கும்போது, இதற்காகவும் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.